‘அஜித்குமார் ரேசிங்’ என்ற யூடியூப் தளம் மூலம் அஜித்குமார் தனது கார் பந்தய ஆர்வத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துவருகிறார்.
நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். கடந்த 2001ஆம் ஆண்டு முதல் கார் பந்தயங்களில் அஜித் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
பல்வேறு அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடி வரும் அஜித், தனது சொந்த பந்தய அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற யூடியூப் ஒளிவழியை உருவாக்கியுள்ளார்.
இந்தத் தளம் அவரது கார் பந்தயம் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அஜித் பந்தயங்களில் பங்கேற்பதோடு இளம் பந்தய வீரர்களை ஊக்குவித்தும் வருகிறார்.
இதில் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சிக் காணொளிகள், அதன் தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும் என்று கூறப்படுகிறது.
அஜித் குமாரின் யூடியூப் ஒளிவழி தொடங்கப்பட்ட சில மணி நேரங்களில் 17,000 பேருக்கும் மேற்பட்டோர் அதனைப் பின்தொடரத் தொடங்கிவிட்டனர்.
இவ்வாண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தயப் போட்டியில் அவரது அணி 3ஆம் இடம் பிடித்து அசத்தியது. மேலும், இத்தாலியில் நடைபெற்ற 12வது ‘மிச்செலின் முகெல்லோ’ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற பந்தயக் குழு 3ஆம் இடம்பிடித்தது.
அதனைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் ஜிடி-4 கார் பந்தயம் நடைபெற்று வரும் நிலையில், அதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். அண்மையில் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பார்முலா 1 கார் பந்தய வீரரான அயர்ட்டன் சென்னா சிலையின் காலில் நடிகர் அஜித் குமார் முத்தமிட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.