தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்: முன்னாள் ‘ஃபார்முலா 1’ பங்கேற்பாளர் தகவல்

2 mins read
a9526efa-f037-4bda-bdf7-6416970cebf0
நரேன் கார்த்திகேயனுடன் அஜித். - படம்: ஊடகம்

நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் ‘ஃபார்முலா 1’ கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் வீரரும் அஜித்தின் நெருங்கிய நண்பருமான நரேன் கார்த்திகேயன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று குறிப்பிட்டு சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், 2025ஆம் ஆண்டுக்கான மோட்டார் ஸ்போர்ட்ஸ் ‘ஜிடி ரேசிங்’ பிரிவில் பங்கேற்க அஜித் கடுமையாக உழைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையாகவே அவர் ஒரு ஜாம்பவான் தான். அவர் அற்புதமாவர் மட்டுமல்ல, நல்ல கார் பந்தய வீரரும்கூட. அஜித்துக்கு கார் பந்தய அனுபவங்கள் அதிகம் இல்லைதான். எனினும் 2010ஆம் ஆண்டு ஒரு முக்கியமான போட்டியில் பங்கேற்று அவர் கார் ஓட்டியது இன்னும் என் நினைவில் உள்ளது,” என்று நரேன் கார்த்திகேயன் தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் திறமைகளுக்கு எல்லையே இல்லை என்றும் அனைத்துக்கும் மேலாக அவர் ஓர் அற்புதமான மனிதர் என்றும் நரேன் கூறியுள்ளார்.

“உங்களுக்கு நான் வழிகாட்டியாக இருந்து, மீண்டும் கார் பந்தயங்களில் உங்களை ஈடுபடுத்த முடிந்தால் அதை என் பாக்கியமாகக் கருதுவேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார் நரேன் கார்த்திகேயன்.

திரை உலகத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் கார், பைக் பந்தயங்கள், புகைப்படக்கலை, டிரோன்கள் உருவாக்கம், துப்பாக்கிச் சுடுதல் எனப் பலவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித்.

தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரு படங்களில் அஜித் நடித்து வருகிறார். பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் சில நாள்கள் ஓய்வு கிடைத்தால் உடனே துபாய் பறந்துவிடுகிறார்.

அங்குள்ள கார் பந்தய மன்றத்தில் உறுப்பினராக உள்ள அஜித், உயர் ரக கார்களை ஓட்டி பயிற்சி பெறுகிறார். அவர் பல்வேறு கார்களில் வேகமாக சீறிப்பாய்ந்து செல்லும் காணொளிகள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அவர் மீண்டும் கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளதாக வெளியான தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்