ரசிகர்கள் கொண்டாடி மகிழும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’

2 mins read
7d02e1c2-6d4d-4ee7-b79d-6e15b1732f48
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித். - படம்: ஊடகம்

அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ படம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியானது. காலையில் இருந்தே மேள தாளம், பாலாபிஷேகம் எனத் திருவிழாபோல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் காலை 9 மணி அளவில்தான் முதல் காட்சி திரையிடப்பட்டதால் அஜித் ரசிகர்கள் பலரும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களுக்குச் சென்று 9 மணிக்கு முன்னதாகவே ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தைப் பார்த்து வருகின்றனர். அங்குக் காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டுவிட்டது.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வியாழக்கிழமை இரவே இப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியாகிவிட்டது. அதனால் இணையத்தில் பலரும் படம் குறித்த தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் அஜித்தை திரையரங்கில் கொண்டாடுவதற்கான படமாகக் ‘குட் பேட் அக்லி’ அமைந்துள்ளது. ரசிகர்கள் ஆரவாரம் செய்வதற்கான காட்சிகளும் பொழுதுபோக்கும் படத்தில் நிறைந்திருக்கிறது. அஜித்தின் 30 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலகப் பயணத்தின் கொண்டாட்டமாக இப்படம் அமைந்துள்ளது. அஜித்தின் மிகத்தீவிர ரசிகரான ஆதிக் வணிக ரீதியாக ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் என்று பதிவிட்டுள்ளனர்.

மற்றொரு எக்ஸ் பயனர் தமது விமர்சனத்தில், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழைய அஜித்தை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. படத்தில் அர்ஜுன் தாஸ் சரியான நேரத்தில் திரையில் தோன்றுகிறார். வலுவான கதை, திரைக்கதை இல்லை என்றாலும் படம் முழுவதும் அஜித் ரசிகர்களுக்கான படமாக ‘குட் பேட் அக்லி’ அமைந்துள்ளது,” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ‘குட் பேட் அக்லி’ படம் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஅஜித்