‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படத்தைப் பார்த்த அஜித் ரசிகர்கள், இளமையான அஜித்தைப் பார்க்கும்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிகிறது என்று பதிவிட்டு இருக்கின்றனர்.
‘விடாமுயற்சியை’ அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜித் குமார். அந்தப் படத்திற்காக தன் உடல் எடையை வெகுவாகக் குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் குமார் தொடர்பான காட்சிகளைப் படமாக்கி முடித்த ஆதிக் ரவிச்சந்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளியை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு “இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி அஜித் சார். கனவு நிறைவேறிவிட்டது. லவ் யூ சோ மச் சார். சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இது ஓர் அழகான பயணம்! குட்பை சார்,” என்று பதிவிட்டுள்ளார்.
ஆதிக் வெளியிட்ட அந்தக் காணொளி மற்றும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “பழைய அஜித் குமார் மீண்டும் வந்துவிட்டார். 90களில் இருந்த அஜித் குமாரை எங்களுக்கு காட்டிய ஆதிக்கிற்கு நன்றி. இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்று உள்ளது. அந்த சிரிப்பை பாருங்கள் சார். எவ்வளவு அழகாக இருக்கிறது,” என அஜித் குமாரின் புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சியில் பதிவிட்டு, படத்தைப் பகிர்ந்து வருகிறார்கள்.