நடிகர் அஜித்தின் 64வது படத்துக்கு ‘ஏகே-64’ எனத் தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்துள்ள இத்தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அஜித் அடுத்தடுத்து பங்கேற்க உள்ள சில கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம்.
இந்நிலையில், அஜித்-ஆதிக் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் அறிவிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அஜித்தின் கார் பந்தய அணி சார்பாக இந்த ஆண்டுக்கான ‘ரேஸிங்’ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக்-அஜித் கூட்டணியில் வெளியான இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் பெற்ற படம் என்ற சாதனையும் படைத்தது. அதிலும் அந்தப் படத்தில் அஜித்தின் தோற்றம் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு அவர் கார் பந்தயங்களில் தன் கவனத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
இந்த ஆண்டு அதிக பந்தயங்களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளாராம். எனவே, அடுத்த ஆண்டு, அதாவது 2027ல் தான் புதுப்பட வேலைகள் தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் அஜித்தின் அடுத்த பட வெளியீட்டிற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். ‘துணிவு’ படத்துக்குப் பின் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்கள் வெளியாயின.
இதற்குப் பிறகு கார் பந்தயங்களில் தனது முழுக்கவனத்தையும் திருப்பினார் அஜித். இதுபோன்ற சூழ்நிலையில்தான் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் இயக்கப்போவதாக தகவல்கள் கசிந்தன.
‘அஜித்-64’ படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு காத்திருப்பதாகவும் அதன் காரணமாகத்தான் படம் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.
இதை எந்தத் தயாரிப்பாளருக்குக் கொடுப்பது என முடிவு செய்ய முடியாமல் இருக்கிறாராம் அஜித்.
‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’, ‘ஏஜிஎஸ்’, ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் படத்தைத் தயாரிக்க விரும்பி அஜித்தை அணுகியுள்ளதாகத் கூறப்பட்டது.
தமிழகத்தில் மட்டும் நூறு கோடி ரூபாயை வசூலித்துள்ளது ‘குட் பேட் அக்லி’ படம். இதனால் அஜித்-ஆதிக் கூட்டணிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதியன்று அவரது கார் பந்தயம் குறித்த ஆவணப்படம் திரையரங்குகளில் வெளியீடு காணப்படும் எனக் கூறப்படுகிறது.
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆர்வத்துடன் வாக்களிக்கும் அஜித்துக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

