நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் குமார், பிரபல காற்பந்து வீரர் ரொனால்டோவின் தீவிர ரசிகர்.
சிறந்த காற்பந்து வீரராக உருவாக வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆத்விக்.
கடந்த அக்டோபர் மாதம் கோவாவில் நடைபெற இருந்த காற்பந்துப் போட்டியில் ரொனால்டோ கலந்துகொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதனால் ஆத்விக் உற்சாகத்தில் மிதக்க, அதைக் கண்ட அஜித்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
ரொனால்டோவை நேரில் சந்திக்க வேண்டும் என்று மகன் கேட்டுக்கொண்டதால், உடனடியாகச் செயலில் இறங்கினார் அஜித்.
கோவாவில் ரொனால்டோ தங்கும் நட்சத்திர விடுதியில் தன் குடும்பத்தினர், நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்த 30 பேருக்குத் தன் செலவில் அறைகளை முன்பதிவு செய்திருந்தார் அஜித்.
மேலும், 30 பேரும் கோவா செல்வதற்கான விமானப் பயணச்சீட்டுகளும் வாங்கப்பட்டன. தன்னைப் போலவே மகனும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டுவதால் மகிழ்ச்சியில் திளைத்த அஜித்துக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
ரொனால்டோ கடைசி நேரத்தில் தமது இந்தியப் பயணத்தை ரத்து செய்துவிட்டார். இதனால் அஜித்தும் கோவா பயணத்தை ரத்து செய்தார்.
மகன் முகம் வாடிப்போனதைக் கண்டு, வெளிநாடு செல்லலாம் என்று கூறி சமாதானப்படுத்தினாராம்.
இந்நிலையில், நவம்பர் 19ஆம் தேதி சென்னை திரும்பிய அஜித், அங்கு தன் மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடியதாகவும் அதன் பிறகு குடும்பத்துடன் வெனிஸ் நகரத்துக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. வெனிஸ் நகரில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்ற பின்னர் துபாய்க்கு பறக்கும் அஜித், அங்குள்ள பங்களாவில் குடும்பத்துடன் சில நாள்கள் தங்கிய பின்னர் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
இதன் மூலம் மகனை ஓரளவு சமாதானப்படுத்திவிட முடியும் என்று நம்புகிறாராம் அஜித்.

