தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிரடி அஜித்தை திரையில் காண முடியும்: சுப்ரீம் சுந்தர்

2 mins read
5750ebd8-1de7-4df6-9ed5-fbde179e130f
(இடமிருந்து) அஜித், சுப்ரீம் சுந்தர், வெங்கட் பிரபு. - படம்: ஊடகம்

அஜித்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றி உள்ளார் சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர்.

‘விடாமுயற்சி’ படத்தை அடுத்து, ‘குட் பேட் அக்லி’ படத்தில் அதிரடியான அஜித்தை திரையில் காண முடியும் என்று சுப்ரீம் சுந்தர் உத்தரவாதம் அளிக்கிறார்.

அஜித்துக்காக இவர் அமைத்த சண்டைக் காட்சிகள் அவருக்கு மிகவும் பிடித்துப்போனதாம். அதனால்தான் அடுத்தடுத்த படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாக கூறுகிறார்.

“முதன்முதலாக ‘துணிவு’ படத்தில்தான் அஜித்துடன் பணியாற்றினேன். முதலில் ஒரு சண்டைக்காட்சியைத் திட்டமிடுங்கள். அது அஜித்துக்குப் பிடித்திருந்தால் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். இல்லையெனில் வாய்ப்பு இல்லை என இயக்குநர் ஹெச்.வினோத் கூறியிருந்தார்.

“நல்ல வேளையாக அஜித்துக்கு எனது வேலை நுணுக்கங்கள் பிடித்திருந்தன. அவரைப் பொறுத்தவரை எப்போதுமே ‘டூப்’ போட மாட்டார். மாஸ்டர், என்னைப் புதுமுகமாக நினைத்து வேலை வாங்குங்கள். அஜித் பெரிய நடிகர் என்ற நினைப்பில் தயங்க வேண்டாம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் அஜித்.

“அவரது ‘துணிவு’ படத்தில் வங்கியில் நடக்கும் சண்டைக்காட்சியைப் படமாக்கியபோது அஜித்தைச் சுற்றி 360 டிகிரியில் கேமரா இடைவிடாமல் சுழன்றபடியே இருக்கும். அஜித்தும் வேகமாக சுற்றிச்சுழன்று சண்டையிட்டார்.

“இதனால் அவர் சற்றே களைப்படைந்ததால் இயக்குநர் வினோத் பயந்துவிட்டார். சாருக்கு சிரமம் கொடுக்காதீர்கள் என அவர் பதற, அஜித்தோ விடவில்லை. 11 டேக் எடுத்த பிறகு அந்தக் காட்சி சரியாக அமைந்தது. அதன் பிறகே அஜித்துக்கு மனநிறைவு ஏற்பட்டது.

“அதேபோல் ‘விடாமுயற்சி’ படத்திலும் கார் துறத்தல் சண்டைக் காட்சியும் மிக இயல்பாக அமைந்ததாகப் பாராட்டினார்.

“அடுத்து வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அமையும் சண்டைக் காட்சிகள் அஜித் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

“அஜித்தின் அர்ப்பணிப்பு மிகவும் அலாதியானது. சண்டைக் காட்சிகளில் கூடுமானவரை, ‘டூப்’ போடாமல் தாமே நடிக்க வேண்டும் என பிடிவாதமாகக் கூறிவிடுவார். ஒரு காட்சியைப் படமாக்கும்போது, உடலின் எந்த பகுதியில் அடிபடும், காயம் ஏற்படும் என்று கேட்டறிந்து, அதற்கேற்ப பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்துவார்,” என்று பாராட்டுகிறார் சுப்ரீம் சுந்தர்.

இவர் ‘கங்குவா’ (தமிழ்), ‘அனிமல்’ (இந்தி), ‘தல்லுமாலா’ (மலையாளம்) உள்ளிட்ட பல படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்தவர். மலையாளத்தில் வெளியான ‘அய்யப்பனும் ஜோஷியும்’ படத்துக்காக சிறந்த சண்டைப் பயிற்றுவிப்பாளருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார். மேலும், பல முன்னணி இயக்குநர்களுடன் தற்போது பணியாற்றி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்