‘அகண்டா 2’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இயக்குநர் போயபதி “இப்படத்தின் இறுதிக் காட்சியில் இருந்து ‘அகண்டா 3’ தொடரும் என்று கூறி, பாலகிருஷ்ணா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
தெலுங்குத் திரையுலகில் பாலகிருஷ்ணா - போயபதி சீனு கூட்டணி என்றாலே அது மிகப் பெரிய வெற்றிக்கான உத்தரவாதம். இதுவரை இணைந்து பணியாற்றிய நான்கு படங்களிலும் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத இந்த வெற்றிக் கூட்டணி, தற்போது ஐந்தாவது முறையாக இணையத் தயாராகி வருகிறது.
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு தாமதமானதால் தொடக்கத்தில் வசூலில் சற்றுத் தடுமாறினாலும் ரசிகர்களின் ஒருமித்த ஆதரவாலும் பொதுமக்களின் வரவேற்பாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, ‘அகண்டா’ தொடரின் அடுத்த பாகம் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இயக்குநர் போயபதி சீனு ‘அகண்டா 3’ குறித்துப் பேசுகையில் சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். “அகண்டா படத்தொடருக்கு ‘அவெஞ்சர்ஸ்’ அளவுக்குக் கதையை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ‘அவெஞ்சர்ஸ்’ என்பது கற்பனை சூப்பர் நாயகர்கள். ஆனால், நம் புராணங்களில் நிஜமான சூப்பர் நாயகர்கள், சக்திவாய்ந்த கதாபாத்திரங்கள் உள்ளனர்.
“அகண்டா 2’ படத்தின் இறுதியில் காட்டப்பட்ட ‘ஷம்பாலா’ கதவுகள் திறப்பதிலிருந்துதான் மூன்றாம் பாகத்தின் கதை தொடங்கும்,” என்றார். தொடர்ச்சியாக ஒரே கதையின் பாகங்களை எடுப்பது சரியாக இருக்காது எனக் கருதும் போயபதி, இடையில் வேறு இரண்டு படங்களை முடித்த பிறகே ‘அகண்டா 3’ பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
‘அகண்டா’ தொடரை 5 அல்லது 6 பாகங்கள் வரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாக பாலகிருஷ்ணா, போயபதி இருவரும் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு பாலகிருஷ்ணா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

