எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிப்பில், ‘ரங்கோலி’ பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’.
பொங்கலுக்கு வெளியாகிறது இப்படம். இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறார் நடிகர் கலையரசன்.
மேடையில் பேசிய அவர், “இனிமேல் அதிகமாக துணைக் கதாபாத்திர வேடங்களில் நடிக்கப்போவதில்லை. எனக்குச் சோறு போட்டதே இந்தத் துணை கதாபாத்திரங்கள்தான். அதை நான் மறக்கவே மாட்டேன்.
“மலையாள சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள் பெரிய படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். ஆனால் அவர்களை ஹீரோவாக வைத்து இரண்டு மூன்று படங்கள் வெளியாகும். இங்கேயும் அந்தச் சூழல் இருக்கிறது. ஆனால் குறைவாக உள்ளது.
“இங்கு ஒரு நடிகர் வில்லனாக நடித்தால் வில்லனாகவேதான் நடிக்க அழைப்பார்கள். இதுவும் ஒரு பஞ்சாயத்தாகவே இருக்கிறது. என்னை எப்போதும் இரண்டாம் நாயகனாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். இனிமேல் முடிந்த அளவுக்கு நாயகனாக நடிப்பேன்,” என்றார் கலையரசன்.