சம்பளத்தை விஜய் திருப்பிக் கொடுத்ததாகப் பரவும் செய்திக்கு அம்பிகா பாராட்டு

சம்பளத்தை விஜய் திருப்பிக் கொடுத்ததாகப் பரவும் செய்திக்கு அம்பிகா பாராட்டு

1 mins read
ae4c8f76-273b-48e0-832d-7d69ec143797
விஜய்யுடன் நடிகை அம்பிகா. - கோப்புப் படம்: தினமணி

நடிகர் விஜய் தனது ‘ஜனநாயகன்’ படத்திற்காகப் பெற்ற சம்பளத்தைத் தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதாக எழுந்த தகவல் திரையுலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செயலை நடிகை அம்பிகா மனதாரப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல், தேர்தல் காரணமாகத் தள்ளிப்போன நிலையில், எதிர்பாராதவிதமாக இணையத்தளங்களில் கசிந்தது.

இதனால் தயாரிப்பாளருக்குச் சுமார் 70 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இப்படத்தின் ஓடிடி உரிமத்தை ரூ.120 கோடிக்கு வாங்கவிருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், தற்போது ரூ.50 கோடிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

தயாரிப்பாளரின் இந்த இக்கட்டான சூழலை உணர்ந்து, விஜய் தனது சம்பளத்தைத் திருப்பிக் கொடுத்ததாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து நடிகை அம்பிகா தனது எக்ஸ் தளத்தில், “விஜய் சம்பளத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். இது உண்மையானால், இது மிகச்சிறந்த மற்றும் முன்மாதிரியான செயல்,” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தவுடன் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்