அம்பிகா, ராதா குடும்பத்தின் சொத்து விவகாரம்: சட்டபூர்வ எச்சரிக்கை அறிவிப்பு

அம்பிகா, ராதா குடும்பத்தின் சொத்து விவகாரம்: சட்டபூர்வ எச்சரிக்கை அறிவிப்பு

படம்: விகடன்

19 Sep 2026 - 5:10 pm

2 mins read

சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ள பிரபல திரைப்படப் படப்பிடிப்பு நிலையமான ஏஆர்எஸ் கார்டன் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சட்ட அறிவிப்புப் பலகை திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

“இந்த நிலம் விற்பனைக்கு உரியது அல்ல; நிலம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன,” என்று அப்பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் திறந்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சொத்து, நடிகைகள் அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் தாயார் சரசம்மா குடும்பத்திற்குச் சொந்தமானது.

கடந்த ஆண்டு அவர்களது தாயார் மறைந்த நிலையில், நிலத்தைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கைப் பலகை பல்வேறு சந்தேகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

இது குறித்துப் பேசிய நடிகை அம்பிகா, “ஸ்டூடியோவை விற்கப் போவதாக வதந்திகள் பரவியதால், தேவையில்லாத விசாரிப்புகளைத் தவிர்க்கவே இப்பலகை வைக்கப்பட்டது.

“ஆர்ஆர் கார்டன் எனப் பெயர் மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஏஆர்எஸ் கார்டன் என்பதே அனைவருக்கும் தெரிந்த பெயராக உள்ளது,” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சட்டபூர்வ அறிவிப்பு அம்பிகாவின் சகோதரர் மல்லிகார்ஜுனன் பெயரில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குத் தொடர்ந்து திரைப்படப் படப்பிடிப்புகள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதே திரையுலகினரின் விருப்பமாக உள்ளது.

நிலம் தொடர்பாக தேவையில்லாத வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகை அம்பிகாவை விமர்சித்து தனியார் யூடியூப் ஒளிவழியில் பத்திரிகையாளர் சேகுவேரா பேசியபோது, அந்தச் சொத்தின் மதிப்பு பல கோடிகளில் இருந்து தற்போது ரூ.1,000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்