“அமிர்தவர்ஷினி... எங்கே தனியாக ஒருமுறை தவில் வாசித்து எல்லாருடைய கைதட்டல்களையும் அள்ளுங்கள் பார்க்கலாம்.”
இப்படிச் சொன்னவர்: ஏ.ஆர்.ரகுமான்.
சொன்ன இடம்: சென்னையில் நடந்த அவரது இசைக்கச்சேரி.
அடுத்த சில நிமிடங்களுக்கு தம் தவில் மூலம் இன்னிசைமழை பொழிந்தார் அமிர்தவர்ஷினி.
தவிலில் அவரது கைவிரல்கள் விளையாடின. அவர் வாசித்து முடித்ததும் ரகுமான் கூறியது போலவே ரசிகர்களின் கைத்தட்டல் அலையாக எழுந்து சில நொடிகள் நீடித்தது.
யார் இந்த அமிர்தவர்ஷினி?
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அடுத்து உள்ள அன்னவாசல்தான் இவரது பூர்வீகம்.
அப்பா மணிசங்கர் நாதஸ்வர வித்வான். அம்மா ஜெயந்தி இசைக்கல்லூரியில் வயலின் ஆசிரியை.
தொடர்புடைய செய்திகள்
தற்போது இரண்டாம் ஆண்டு சட்டப்படிப்பு படித்துவரும் அமிர்தவர்ஷினி, இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இயல்பாகவே அவருக்கும் இசைமீது ஆர்வம் ஏற்பட்டதில் வியப்பில்லை.
அமிர்தவர்ஷினியின் தாத்தா, பாட்டியும்கூட இசைக்கலைஞர்கள் தானாம். இவரது தாயார் ‘மங்கள லய நாதம்’ எனும் இசைக்குழுவை 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
ஏழு வயதில் தவில் வாசிக்கத் தொடங்கிய பின்னர் பெற்றோருடன் எந்த இசைக் கச்சேரிக்குச் சென்றாலும் இவரும் மேடையேறி தவில் வாசிக்கத் தவறியதில்லை.
இதுவரை 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் இவர் தவில் வாசித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தமிழர் பொருளியல் மாநாட்டிலும் இவரது தவில் இசை ஒலித்திருக்கிறது.
பாரம்பரிய இசைக்கருவியாகத் தவிலைக் கையாளும் பெண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பாராட்டுகளைக் குவித்துள்ளார் அமிர்தவர்ஷினி.
ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததை விவரிக்கும்போது அமிர்தவர்ஷினியின் முகத்தில் அவரது இசையைப் போலவே பொலிவைக் காண முடிகிறது.
தாம் தவில் வாசிப்பதை காணொளியாகப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் இவர் பதிவிட்டு வந்துள்ளார். திடீரென ஒருநாள் இவரது சமூக ஊடகப் பக்கத்தை ஏ.ஆர். ரகுமான் பின்தொடர்வது தெரியவந்தது.
“அடுத்த ஓரிரு நாள்களில் திரு ரகுமான் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. சென்னைக்கு வந்துசேரும்வரை எதற்காக அழைத்தார் என்பது தெரியாது. பிறகுதான் கச்சேரி நடக்கும் தகவல் தெரிந்தது,” என்றார் அமிர்தவர்ஷினி.
அதிலும், கச்சேரியில் இவர் மட்டுமே தனியாகத் தவில் வாசிப்பார் என்பதையும் கடைசிவரை சொல்லவே இல்லையாம். அந்த நிகழ்ச்சியில் அமிர்தவர்ஷினி தவில் வாசித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
“ரகுமான் கச்சேரியில் வாசிக்க வேண்டும் எனது பலநாள் கனவு. நான் தவில் வாசிக்கும் விதம் அவருக்குத் தெரிந்ததே பெரிய விஷயம் என நினைத்தேன். இப்போது அவரது கச்சேரியில், அவரது முன்னிலையில் தனியாகத் தவில் வாசிக்க கிடைத்த வாய்ப்பை என்னவென்று நான் விவரிப்பது,” என்று கண்கள் பனிக்கப் பேசினார் அமிர்தவர்ஷினி.
இப்போது பல திரைப்பட வாய்ப்புகளும் இவரைத் தேடிவருகின்றனவாம்.
தமது காணொளிகளைப் பார்த்த பல பெண்கள் தவில் இசைக்கருவியை வாசிக்க முன்வந்திருப்பது கூடுதல் உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் அமிர்தவர்ஷினி.
“பெண்கள் தவில் கற்பது அவசியமா? அவர்களால் இத்துறையில் தாக்குப்பிடிக்க முடியுமா? என்று பலர் கேட்கிறார்கள். இந்த இசைக்கருவிமீது உள்ள பொதுப்பார்வையை மாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம்.
“இந்தப் பணியை ஓரளவு செய்து முடித்திருப்பதாகவே நினைக்கிறேன். இனிமேலும் இந்தப் பணி தொடரும்,” என்று ஊடக நேர்காணல் ஒன்றில் இவர் குறிப்பிட்டுள்ளார்.

