திரைப்பட வாய்ப்பு கிடைத்தும் அதிர்ஷ்டம் இல்லை: கண்ணீர் வடிக்கும் ஆனந்தி

திரைப்பட வாய்ப்பு கிடைத்தும் அதிர்ஷ்டம் இல்லை: கண்ணீர் வடிக்கும் ஆனந்தி

2 mins read
fa1bf0aa-222b-4afd-97c8-cc15bdf9b626
நடிகை ஆனந்தி. - படங்கள்: விகடன்

தமிழ்த் திரையுலகில் மீண்டும் நடிக்கத் தொடங்கிய பிறகு, தான் நடித்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக படத்தொகுப்பின்போது நீக்கப்படுவது குறித்து நடிகை ஆனந்தி மிகுந்த மனவேதனை தெரிவித்துள்ளார்.

ரத்னகுமாரின் ‘29’, சூர்யாவின் ‘கருப்பு’, விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்த காட்சிகள் படத்தொகுப்பின்போது நீக்கப்பட்டுள்ளன.

ஜூலை 23ஆம் தேதியன்று திரைக்கு வந்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திலும் தனது காட்சிகள் நீக்கப்பட்டதால் வருத்தமடைந்த அவர், சமூக ஊடகப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“திரைப்படங்களில் நான் நடித்த காட்சிகள் நீக்கப்படுவதற்காக என்றைக்குமே பெரிய அளவில் வருத்தப்பட்டதில்லை,” என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

“ஆனால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

“மறுபிரவேசத்திற்குப் பிறகு முதன்முதலில் ஒப்பந்தமான படம் இதுதான்.

“விஜய்யுடன் திரையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டாக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்,” எனத் தெரிவித்தார்.

விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசையில்தான் நடிக்க வந்ததாகக் குறிப்பிட்ட அவர், அது நீண்ட நாள் கனவு என்றும் கூறினார்.

“திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது.

“பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தைக் கண்டிப்பாகத் திரையரங்கிற்குச் சென்று அனைவரும் பாருங்கள்,” எனக் கேட்டுக்கொண்டார்.

எனினும், திரையரங்கிற்குச் சென்றபோது தமது காட்சிகள் நீக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக ஆனந்தி உணர்ச்சிவசப்பட்டார்.

“இதுவே விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இனியும் அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

“அந்த வகையில் என்னை மிகவும் அதிர்ஷ்டமில்லாதவளாக உணர்கிறேன்,” என்று நடிகை ஆனந்தி கண்ணீருடன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்