நடிகர் ரஜினி எளிமையான வாழ்க்கையைத்தான் விரும்புவார் என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
தனது திரைத்துறை அனுபவங்கள் தொடர்பாக பல்வேறு சுவாரசியமான தகவல்களை அண்மைய நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ளார்.
அனிருத் பேட்டி என்றால் ரஜினி குறித்து கேள்விகள் இல்லாமல் போகுமா?
ரஜினி பற்றிய சில சுவாரசியமான தகவல்களையும் அனிருத் பகிர்ந்திருக்கிறார்.
பொதுவாக, திரைத்துறை நாயகர்களாகவும் பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருப்பவர்களும் தங்குவிடுதிகளில் உள்ள நல்ல வசதியான பெரிய அறைகளில் தங்குவதைத்தான் விரும்புவார்கள். ஆனால், ரஜினிகாந்த் அப்படியில்லையாம். இந்த விஷயத்தில் எளிமையானவராம்.
“நான் ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒருமுறை அவர் லண்டனுக்குச் செல்ல வேண்டும். அங்கே அவருக்காக பதிவு செய்யப்பட்டிருந்த அறைக்கு ஓர் இரவுக்கு ரூ.20,000 கட்டணம்.
“ஓர் இரவுக்கு அவ்வளவு கட்டணமா எனச் சொல்லி லண்டனுக்கு செல்லும் விமானப் பயணச் சீட்டையே ரத்து செய்யச் சொல்லிவிட்டார்,” என்று கூறியுள்ளார் அனிருத்.
சிறு வயதிலிருந்து தாம் இப்படியான விஷயங்களைப் பார்த்துத்தான் வளர்ந்திருப்பதாகவும் அதனால் அதிகமாக பணம் செலவழிக்க வேண்டுமென்றாலே ஒரு மாதிரியாக இருக்கும் என்றும் அனிருத் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது ரஜினி நடிக்கும் ‘கூலி’, ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களுக்கு அனிருத், இசையமைத்துள்ளார்.
அண்மைக் காலமாக தாம் நடிக்கும் படங்களுக்கு அனிருத் இசையமைப்பதைத்தான் ரஜினி விரும்புகிறார். இதை அவரே மேடையில் பேசும்போதும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இரட்டிப்பு உற்சாகத்தில் உள்ள அனிருத்தும் ரஜினி படம் என்றால் கூடுதலாக மெனக்கெடுகிறார்.
‘வேட்டையன்’ படத்துக்கு இசையமைத்தபோது, ரஜினி சில யோசனைகளை இவருக்கு வழங்கினாராம். அவை பல வகையிலும் தமக்குப் பயனளித்ததாகக் கூறியுள்ளார்.
ரஜினிகாந்துடன் ஒரு தொழில் ரீதியான உறவு மட்டும் இருப்பதாகக் கூறாமல், இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் அனிருத்.