‘ரேகா சித்திரம்’ படத்தின் மூலம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் தம் பக்கம் திருப்பியுள்ளார் நடிகை அனஸ்வரா ராஜன்.
இந்தப் படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு அனஸ்வரா நடித்த ‘என்னு சொந்தம் புண்யாலன்’ என்ற படமும் வெற்றிப் பட வரிசையில் இணைந்துள்ளது. இதனால் இரட்டிப்பு உற்சாகத்துடன் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அனஸ்வரா. மிக விரைவில் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் அறிமுகமாகிறாராம்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் கதாநாயகி இவர்தான்.
“கடந்த ஆண்டில் இடைவிடாமல் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலான நேரம் படப்பிடிப்பில்தான் இருந்தேன். அப்போது நடித்த படங்கள் எல்லாம் இப்போது ஒவ்வொன்றாக வெளியாகின்றன. அவற்றுள் ‘ரேகா சித்திரம்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகி நேர்மறை விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
“இந்தப் படத்தின் வெற்றிதான் தமிழ் சினிமாவிலும் எனக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன். செல்வராகவனை முழுமையான இயக்குநர் என்று தயக்கமின்றி கூறலாம். அவரது படைப்புகள் அப்படிப்பட்டவை. அவருடன் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அது இப்போது நிறைவேறி உள்ளது,” என்கிறார் அனஸ்வரா ராஜன்.
இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.
தமிழில் பல இயக்குநர்களின் படைப்புகள் தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாகக் குறிப்பிடுபவர், தமிழ்ப் படங்களுக்கு சீனா, ஜப்பான் எனப் பல நாடுகளில் கிடைக்கும் வரவேற்பு வியப்பளிப்பதாகச் சொல்கிறார்.
இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான் இவரது கனவாம். அந்த நிகழ்வு நடக்காமல் போனால் தனது வாழ்க்கை முழுமை பெறாது என்கிறார்.
“‘ரேகா சித்திரம்’ மலையாளத் திரைப்படம் துணை நடிகர்களைப் பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. அவர்களுக்காக சிறப்பு காட்சியையும் திரையிட்டோம்.
“படம் பார்த்த பிறகு அனைவருமே பாராட்டினர். ‘இதுவரை பெண்களைப் பற்றி யாரும் காட்சிப்படுத்தாத சில விஷயங்களைத் திரையில் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதற்கு எங்கள் நன்றி’ என்று அவர்கள் கூறியபோது மிகுந்த மனநிறைவு ஏற்பட்டது. இந்த வாழ்த்து என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.
“துணை நடிகர்களாக திரையுலகில் நீடிப்பது அவ்வளவு எளிதல்ல. படத்தில் ஒரு வசனமாவது பேசிவிட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பார்கள். அவர்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதை என் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகக் கருதுகிறேன்,” என்று சொல்லும் அனஸ்வரா, இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டியின் ரசிகையாக நடித்துள்ளார்.
நிஜ வாழ்க்கையிலும்கூட இவர் மம்மூட்டியின் ரசிகைதானாம். படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக இவர் மம்மூட்டியிடம் அவரது கையெழுத்தை (ஆட்டோகிராஃப்) கேட்டு வாங்குவாராம். இதற்காக கையெழுத்திட்டபோது, ‘உங்கள் அன்புள்ள சகோதரர் மம்மூட்டி’ என்று குறிப்பிட்டுள்ளார் மம்முட்டி.
அந்தக் கையெழுத்தைப் பத்திரப்படுத்தி உள்ளாராம் அனஸ்வரா.
“இதுவரை எனது நடிப்பைப் பாராட்டியுள்ள விமர்சகர்கள் எல்லாருமே நான் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணைப்போன்று காட்சி அளிப்பதாகவும் இயல்பாகப் பேசி நடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ரசிகர்களும்கூட இப்படிச் சொல்வதை கேட்டிருக்கிறேன்.
“எல்லாரும் அவர்களது வீட்டில் இருந்து வந்த பெண்ணைப் போல் என்னைக் கருதுகிறார்கள். ஒருமுறை என்னை நேரில் சந்தித்தபோது ஒரு பெண்மணி ‘உங்களுடைய கதாபாத்திரம் அப்படியே என் மகளைப்போல் இருக்கிறது’ என்றார். பல தாய்மார்கள் என்னை தங்கள் மகளைப்போல் இருப்பதாகக் குறிப்பிடுவது அளவற்ற மகழ்ச்சியைத் தருகிறது,” என்கிறார் அனஸ்வரா ராஜன்.
சிறு வயதில் நடிப்பில் இவருக்கு அதிக ஆர்வம் இல்லையாம். எனினும் தாம் பிறந்த கிராமத்தில் இயங்கிய நாடகக்குழுவில் இடம்பெற்றிருந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் நடிப்பின் மீதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த குடும்ப நண்பர் ‘உதாஹரணம்’ படத்தில் கதாநாயகிக்கான நடிப்புத்தேர்வு நடைபெறும் தகவலைத் தெரிவித்தாராம்.
“இதையடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் அந்தத் தேர்வில் கலந்துகொண்டேன். மொத்தம் ஐயாயிரம் பேர் வந்திருந்தனர். அவர்களில் இருந்து நான் மட்டும தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதில் மகிழ்ச்சி.
“திரைத்துறைக்கு வரவில்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள் என்ற கேள்விக்கு, உண்மையாகவே பதில் தெரியவில்லை,” என்று சொல்லிச் சிரிக்கிறார் அனஸ்வரா.

