நடிகர் யாஷ் நடிப்பில் அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.100 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளது.
திரைப்படங்களின் வசூல் சாதனைகளை மட்டும் கொண்டாடும் திரையுலகப் போக்கை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டித் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திரைத்துறையில் வன்முறையும் போதைப்பொருள்களை மையமாகக் கொண்ட கதைகளும் அதிகரிக்கும் போக்கைக் கண்டித்தார்.
இத்தகைய கதைகள் சமுதாயத்தைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் குறிப்பிட்ட அவர், அதுகுறித்துத் தமது ஆழ்ந்த ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
“ஒரு திரைப்படம் ரூ.100 கோடி அல்லது ரூ.500 கோடி வசூலிப்பது மட்டுமே அதன் வெற்றிக்கான அளவுகோலாக மாறிவிட்டது.
“ஆனால், அது இளம் தலைமுறையின் மனநிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் சிந்திப்பது இல்லை,” என்று திரு அண்ணாமலை சாடினார்.
இன்றைய இளையர்கள் மணிக்கணக்கில் சமூக ஊடகங்களிலும் திரையரங்குக் கொண்டாட்டங்களிலும் மூழ்கிக் கிடப்பது அவர்களின் உற்பத்தித்திறனையும் எதிர்காலத்தையும் பாதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
சமூக ஊடக மோகம், அளவுக்கு அதிகமான திரைப்படங்களின் தாக்கம் காரணமாக இளையர்கள் உண்மையான வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தவறிவருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலை நீடித்தால் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் திரு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வணிக ரீதியான வெற்றிகளைத் தாண்டி, படைப்பாளிகளும் திரையுலகினரும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இளையர்கள் தங்களின் பொன்னான நேரத்தைச் சமூக ஊடகங்களிலும் வன்முறை சார்ந்த திரைப்படங்களிலும் வீணடிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்குப் பதிலாக இளையர்கள் தங்களின் முன்னேற்றத்திலும் நாட்டின் வளர்ச்சியிலும் கவனத்தைச் செலுத்தவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


