இசைஞானிக்கு மற்றுமொரு மகுடம்: இளையராஜாவுக்குப் ‘பத்மபாணி’ விருது

1 mins read
0292bc23-46a5-405b-89e4-d473ac3ae523
இசையமைப்பாளர் இளையராஜா. - படம்: தினத்தந்தி

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில், அஜந்தா - எல்லோரா அனைத்துலக திரைப்பட விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது விழா இம்மாதம் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எட்டு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 70 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவில், இந்தியத் திரையிசையின் ஜாம்பவான் இளையராஜாவுக்குச் சிறப்புமிக்க ‘பத்மபாணி விருது’ வழங்கப்பட இருக்கிறது. இதனை விழா ஏற்பாட்டாளர்கள் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.

இந்திய, அனைத்துலகக் கலைஞர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள், திரைப்பட ஆர்வலர்கள் முன்னிலையில் ஜனவரி 28ஆம் தேதி மாலை நடைபெறும் தொடக்க விழாவில் அவருக்குப் பத்மபாணி நினைவுச் சின்னம், பாராட்டுப் பத்திரம், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்படும்.

ஏற்கெனவே இவ்விருதைப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், மூத்த இயக்குநர் - எழுத்தாளர் சாய் பரஞ்ச்பே, நடிகர் ஓம் பூரி ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்