சிலம்பரசனின் ‘STR 49’ படத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டன.
இதில் சிம்புவுடன் மற்றொரு கதாநாயகனும் இணைகிறார் என்பது சிம்பு ரசிகர்களை யோசிக்கவும் உற்சாகம் அடையவும் வைத்துள்ளது.
மணிரத்னத்தின் இயக்கத்தில், கமலுடன் இணைந்து சிம்பு நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ படம் ஜூன் மாதம் வெளியாகிறது. இதுதான் சிம்பு நடிப்பில் வெளியாகும் 48வது படம்.
அடுத்து ‘பார்க்கிங்’ ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்புவின் 49ஆவது படம் உருவாகிறது. இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியை அண்மையில் வெளியிட்டனர். மிகவும் மிரட்டலாக உள்ளது என சிம்பு ரசிகர்கள் இச்சுவரொட்டியைக் கொண்டாடுகிறார்கள்.
படத்தின் கதையை சிம்புவிடம் விவரித்தபோதே, இதில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாகக் குறிப்பிட்டாராம். அது மட்டுமல்ல, படம் முழுவதும் நாயகனுக்குரிய முக்கியத்துவத்துடன் அந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்.
மேலும், அதில் சந்தானம் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் ராம்குமார் கூறியதைக் கேட்ட சிம்பு ஆச்சரியமாகிவிட்டாராம்.
“சந்தானம் இப்போது நாயகனாகி தனக்கென ஒரு தனிப்பாதையில் நடைபோடுகிறார். ஆனாலும் என்னுடன் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பார். அதேசமயம், என் படம் அவருக்கும் பலம்சேர்ப்பது போன்ற கதாபாத்திரத்துடன் உருவாக வேண்டும். அப்படி இருந்தால் நானே அவரை அழைப்பேன்.
“உங்களுடைய கதை அதற்கான உத்தரவாதத்தை அளிப்பதாக உள்ளது,” என்று கூறிய சிம்பு, அத்துடன் நின்றுவிடாமல், தாமே சந்தானத்தைத் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், சிம்பு நடிக்கக் கேட்டதும், உடனே பச்சைக்கொடி காட்டிவிட்டார் சந்தானம்.
திரையுலகில் தமக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த சிலரில் சிம்புவும் ஒருவர் என்பதாலும் நட்புக்கு மரியாதை தரும் வகையிலும் சந்தானம் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
அதேசமயம் சிம்பு படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரம், அவரது கதாநாயக ‘இமேஜை’ எந்த விதத்திலும் பாதிக்காது எனும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாம்.
இது கல்லூரியின் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தேர்வு செய்யப்படும் கல்லூரி ஒன்றிலேயே பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்கு முன் வெளியான சில கதாநாயகர்கள் நடித்துள்ள, கல்லூரியைக் கதைக்களமாகக் கொண்ட படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் படமாக்கப்பட்டிருக்கும்.
அதே இடங்களில் மீண்டும் காட்சிகளைப் படமாக்கினால் ரசிகர்களுக்குப் போரடித்துவிடும்.
எனவே, இதுவரை திரையில் காட்டப்படாத ஒரு கல்லூரியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ஹைதராபாத், கேரளா எனப் பல இடங்களில் கல்லூரிக்கான தேடுதல் வேட்டையை நடத்தி வருவதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர்.
அநேகமாக, எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனராம்.
இதற்கிடையே, கமலுடன் இணைந்து சிம்பு நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ படத்திற்கான விளம்பர ஏற்பாடுகளும் தொடங்க உள்ளன.
எல்லாம் சரி, கதாநாயகி யாரென்று சொல்லவில்லையே என்கிறீர்களா?
சிம்புவின் ஜோடியாக இதுவரை நடித்திராத நாயகியை ஒப்பந்தம் செய்யப் போகிறார்கள்.
அண்மையில் இளையர்களைப் பெரிதும் கவர்ந்துள்ள கயாது லோகர், மிருணாள் தாக்குர் என சில நாயகிகளின் பெயர் பரிசீலனையில் உள்ளதாம்.