தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய் சேதுபதி செய்த உதவி; நன்றி தெரிவித்த அனுராக்

3 mins read
8d14f00e-54c4-4e09-b160-316f44c4b74d
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

கடந்த காலங்களில் விஜய் சேதுபதியை பற்றி பலரும் பலவிதமாகப் பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் முன்னணி இயக்குநரும் இப்போது நடிகராகவும் மிளிர்ந்து கொண்டிருக்கும் அனுராக் காஷ்யப் அவரைப் பாராட்டியிருப்பது குறித்து பாலிவுட் வட்டாரத்திலும் பெரிதாகப் பேசப்படுகிறது.

அனுராக் மகளின் திருமணத்துக்கு விஜய் சேதுபதி பொருளியல் ரீதியில் உதவினாராம். இதுகுறித்து அனுராக் கூறுவதைக் கேளுங்கள்.

“தமிழில் நான் நடித்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்திற்குப் பிறகு பல தென்னிந்திய பட வாய்ப்புகள் தேடி வந்தபோது அனைத்தையும் நிராகரித்தேன்.

“அப்போது எனது ‘கென்னடி’ படத்தின் இறுதிக்கட்டப் பணி நேரத்தில் விஜய் சேதுபதியை அடிக்கடி சந்தித்தேன். அவர் தன்னிடம் ஒரு அற்புதமான கதை இருப்பதாகவும் அதை என்னிடம் கொண்டுவர முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.

“முதலில் நான் அந்தக் கதையைக் கேட்கக்கூட மறுத்துவிட்டேன். ஆனால், என்னுடைய ‘கென்னடி’ படத்திற்கு அவர் ஏதோவொரு வகையில் உதவினார். அதற்காக அவருக்கு என் படத்தில் நன்றி எனக் குறிப்பிட்டிருந்தேன்.

“பின்னர் மீண்டும் ஒருமுறை சந்தித்தபோது, ‘அடுத்த ஆண்டு என் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு என்னால் செலவு செய்ய முடியுமா எனத் தெரியவில்லை’ என்று கூறினேன்.

“அதற்கு விஜய் சேதுபதி, ‘நாங்கள் உங்களுக்கு உதவுவோம்’ என்றார். அப்படித்தான் ‘மகாராஜா’ திரைப்படம் உருவானது. அவர் நல்ல மனிதர்,” என்று கூறியுள்ளார் அனுராக் காஷ்யப்.

இதற்கிடையே, விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘தலைவன் தலைவி’. இதன் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு கடந்த 3ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முதன்முறையாக இப்படத்தில் பரோட்டா மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இவரது ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

மேலும், சேலம் சரவணன், செம்பன் வினோத் ஜோஷ், யோகி பாபு, ரோசினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சேதுபதி, நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மிக இயல்பாக, அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவாம்.

“படத்தலைப்பைக் கேட்டதுமே ரசிகர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது,” என்று உற்சாகப்படுகிறார் பாண்டிராஜ்.

இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. பாண்டிராஜுடன் முதல் முறையாக கூட்டணி சேர்ந்து இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இதற்கிடையே, விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஏஸ்’ திரைப்படம் இம்மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘டிரெயின்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளும் நடந்து வருகின்றன.

மேலும், ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் சேதுபதி நடிக்கும் இணையத்தொடருக்கான முதற்கட்டப் பணிகளும் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிப்பதால் படத்திற்கும் முதலில் ‘பரோட்டா மாஸ்டர்’ என்றுதான் தலைப்பு வைக்கத் திட்டமிட்டிருந்தாராம் பாண்டிராஜ்.

“படம் முழுவதும் விஜய் சேதுபதி தனக்கே உரிய, ரசிகர்களுக்குப் பிடித்தமான நகைச்சுவை தொனியுடன் திரையில் வலம் வருவார். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல படைப்பாக இருக்கும்.

“படத்தின் வெளியீட்டுத் தேதி, மற்ற தகவல்கள் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும்,” எனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்