தமிழ் சினிமாவில் ‘கும்கி’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, கடந்த 13 ஆண்டுகளாகத் தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விக்ரம் பிரபு, தனது திரைப்பயணம், அடுத்ததாக வெளியாகவுள்ள ‘சிறை’ திரைப்படம் குறித்து அருமையான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சிறை’. இப்படத்தின் கதைக்களம் குறித்துப் பேசிய விக்ரம் பிரபு, “கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்திலிருந்து நான் மீண்டு வந்த நேரத்தில், ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் என்னைச் சந்தித்தார். தான் காவல்துறையில் பணியாற்றியபோது நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கதையை எழுதியதாகவும், ‘கதிரவன்’ என்ற அந்தக் கதாபாத்திரத்திற்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் எனவும் கூறினார். பின்னர் இயக்குநர் சுரேஷ் முழுக் கதையையும் கூறினார். 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் கதை இது. சிறையிலிருந்து ஒரு விசாரணைக் கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பயணமும் அதற்குள் நடக்கும் சம்பவங்களுமே இப்படத்தின் மையக்கரு,” என்று விவரித்தார்.
மேலும், இப்படத்தில் தனக்கு ஜோடியாக அனந்தா பெண் காவலராக நடித்துள்ளதாகவும் தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் அக்ஷய் குமார், அனிஷ்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதன்முறையாகத் தெலுங்கில் ‘காட்டி’ (Ghaati) என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார் விக்ரம் பிரபு. இதுகுறித்துப் பேசுகையில், “இயக்குநர் கிரிஷ்தான் என்னை அங்கு அழைத்துச் சென்றார். அப்படத்திற்கு நானே தெலுங்கில் குரல் கொடுத்தேன். அதைக் கேட்டுவிட்டு, ‘அச்சு அசல் தெலுங்குக்காரர் போலவே பேசுகிறீர்கள்’ என இயக்குநர் பாராட்டினார்,” என்று பெருமிதத்துடன் கூறினார்.
மேலும் சக நடிகை அனுஷ்கா குறித்துப் பேசுகையில், “அனுஷ்கா மிகவும் இரக்க குணம் கொண்டவர். படப்பிடிப்பில் வெயிலில் வாடுபவர்களுக்குக் குடை வாங்கிக் கொடுப்பது, தொழிலாளர்கள் சாப்பிடும் இடத்தில் ஏசி வசதி செய்து கொடுப்பது என அவர் செய்யும் உதவிகள் என் அப்பாவை (நடிகர் பிரபு) ஞாபகப்படுத்தியது,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மதுரையில் நடந்த ‘சிறை’ படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பின் போது, ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் சீரகச் சம்பா மட்டன் பிரியாணி, ஜிகர்தண்டா விருந்து வைத்துள்ளார் விக்ரம் பிரபு. இது பற்றிக் கேட்டபோது, “விருந்தோம்பல் என்பது தாத்தா, அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பண்பாடு. மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதில் அப்பாவுக்கு நிகர் அவரேதான். அதை நானும் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்,” என்றார்.
இயக்குநரும் தனது மைத்துனருமான ஆதிக் ரவிச்சந்திரன் குறித்துப் பேசிய அவர், “ஆதிக் ரசிகர்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்தவர். அஜித்தின் தீவிர ரசிகரான அவர், ‘குட் பேட் அக்லி’ படத்தை ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் கொடுத்துள்ளார். அவருடன் பேசினால் நேரம் போவதே தெரியாது,” என்றார்.
தனது 13 ஆண்டுகால சினிமா பயணம் குறித்துப் பகிர்கையில், “இன்று வரை ‘கும்கி’ படத்தின் பொம்மன் கதாபாத்திரம் தனித்துவமாகப் பேசப்படுகிறது. இந்த 13 ஆண்டுகளில் சினிமாவை நிறையக் கற்றுக்கொண்டேன். இங்குத் தொழிலுக்குத்தான் முதலிடம், கலை அடுத்ததுதான் என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்று யதார்த்தமாகப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் மறைந்த ஏவி.எம். சரவணன் குறித்துப் பேசிய விக்ரம் பிரபு, “தாத்தா நடித்த முதல் படத்தின் முதல் காட்சியை ஏவிஎம்ல் ஸ்டூடியோவில்தான் எடுத்தார்கள். எங்கள் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு. மிகவும் அமைதியானவர். அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு,” என்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

