கடந்த சில ஆண்டுகளாக அனுஷ்கா நடிப்பில் வெளியான படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது ஒருபுறம் இருக்க, நீண்ட காலமாக ஒரு வெற்றிப் படத்தைத் தர முடியவில்லையே என்ற கவலையில் அவர் மூழ்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தெலுங்கு இயக்குநர் கிரிஷ், அனுஷ்கா இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, கிரிஷ் தமிழில் இயக்கிய ‘வேதம்’ படத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா.
தற்போது கிரிஷ் இயக்கியுள்ள ‘காதி’ படத்தில் அனுஷ்காதான் நாயகி.
ஜூலை 11ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ‘வேதம்’ படம் வெளியாவதற்கு முன்பு நடந்த சில சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார் கிரிஷ்.
அப்படத்தின் விளம்பரத்துக்காக அனுஷ்காவின் கவர்ச்சியான படம் ஒன்றை பெரிய பதாகையாக உருவாக்கி, ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா என்ற இடத்தில் வைத்திருந்தனராம்.
அந்த பிரம்மாண்டமான பதாகையைக் கண்ட வாகனமோட்டிகள் அனுஷ்காவின் அழகால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“இருசக்கர வாகனமோட்டிகளும் வாடகை வாகனங்களின் ஓட்டுநர்களும் அனுஷ்காவின் கவர்ச்சியில் மயங்கினர். அவர்களால் அந்தப் பதாகையைக் கடந்து செல்ல முடியவில்லை. அதனால் வாகனத்தை நிறுத்தி பதாகையை நிதானமாகப் பார்த்து, ரசித்துச் சென்றனர்.
“இதனால் 40க்கும் மேற்பட்ட விபத்துச் சம்பவங்கள் பதிவாகின. பதாகைதான் விபத்துக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட போக்குவரத்து காவல்துறையினர், உடனடியாக அந்தப் பதாகையை அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.
“பொதுநலன் கருதி அந்தப் பதாகையை மட்டுமல்லாமல், ஹைதராபாத்தில் வைக்கப்பட்டிருந்த அனுஷ்கா பதாகைகள் பலவற்றை அகற்றினோம்,” என்றார் இயக்குநர் கிரிஷ்.