அரசன் படத்தின் ‘ப்ரோமோ’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதற்கு சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது பதிவும் தற்போது இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் ‘ப்ரோமோ’ சில நாள்களுக்கு முன்பு திரையிலும், யூடியூப்பிலும் வெளியானது.
ஐந்து நிமிட அந்த குறு முன்னோட்டக் காட்சி அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் கவர்ந்துள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ப்ரோமோ’ இருந்ததே அதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் அரசன் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அரசன் ‘ப்ரோமோ’ யூடியூப்பில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
சிம்பு, தனது டுவிட்டர் பக்கத்தில், “அரசன் ப்ரோமோவை கொண்டாட்டமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி. உங்களின் அன்பிற்கும் எனர்ஜிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,” என குறிப்பிட்டுள்ளார்.
யூடியூப்பில் மட்டுமல்லாமல் திரையிலும் அரசன் ப்ரோமோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அரசன் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியாவதற்கு முன்பு சிம்பு ஒரு பதிவு போட்டிருந்தார்.
“இந்த ப்ரோமோவை எப்படியாவது திரையில் பார்த்துவிடுங்கள். நேரம் இருந்தால் கண்டிப்பாக அரசன் ப்ரோமோவை திரையில் பாருங்கள். கண்டிப்பாக அதற்கு மதிப்பு இருக்கும் என கூறியிருந்தார்.
அவர் சொன்னதைப் போலவே அரசன் ப்ரோமோ திரையில் பார்த்ததற்கு மிகவும் மதிப்பான ஒர் அனுபவமாக அமைந்ததாக ரசிகர்கள் சொல்கின்றனர்.
யூடியூப்பில் இந்த ப்ரோமோவை பார்க்கும்போதே செம த்ரில்லாக இருந்ததாகவும், இந்த ப்ரோமோவை திரையில் காணத் தவறிய ரசிகர்கள் வருந்துகின்றனர் என்றும் கருத்து்கள் வருகின்றன.
இந்த நிலையில் இப்படம் விரைவில் முடிக்கப்பட்டு திரையில் வெளியிட வேண்டும் என்பது சிம்பு ரசிகர்களின் ஒரே ஒரு கோரிக்கையாக இருந்து வருகின்றது.
அனேகமாக அடுத்தாண்டு கோடையில் அரசன் திரைப்படத்தை நாம் திரையில் எதிர்பார்க்கலாம் எனத் தெரிகிறது.
மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு மீண்டும் வழக்கநிலைக்கு வந்தார். அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என பல வெற்றிப்படங்களை அவர் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து இரண்டு வருடங்களாக சிம்புவின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து மாபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘தக்லைப்’ என்ற திரைப்படம் வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து சிம்பு தக்லைப் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது சிம்புவின் ரசிகர்கள் அனைவரும் அரசன் திரைப்படத்தையே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.

