வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் வரும் 2027 பொங்கலுக்கு வெளியாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, இத்தகவலை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
“ரசிகர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிச்சயமாகக் காப்பாற்றும் வகையில், ‘அரசன்’ திரைப்படம் மிகத் தரமான படைப்பாக உருவாகி வருகிறது.
“அவசரப்பட்டு படத்தை வெளியிட்டால் படத்தின் தரமும் கலைநயமும் பாதிக்கப்படும் என்பதால், பொங்கல் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் விளக்கமளித்தார்.
வடசென்னைப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘துரந்தர்’ திரைப்படம்போல ‘அரசன்’ படமும் இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிம்பு நம்பிக்கை தெரிவித்தார்.
பொங்கலுக்குப் படம் வெளியாகாத நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ‘த வேர்ல்ட் ஆஃப் அரசன்’ என்ற கிளிம்ப்ஸ் காணொளியை இந்தத் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியிட, படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதுவரை படமாக்கப்பட்ட சில பகுதிகளைக் கொண்டு அரசனின் உலகத்தை விளக்கும் வகையில் இந்தச் சிறப்புக் காணொளி அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தைக் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.


