எந்த மொழி நடிகையாக இருந்தாலும், ‘தமிழ் ரசிகர்களின் அன்பு அலாதியானது’, ‘தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை’ என்று தங்களுடைய பேட்டிகளில் குறிப்பிடத் தவறுவதில்லை. உண்மையும் அதுதான்.
பல மொழிகளில் முன்னணி நாயகிகளாக இப்போது வலம்வரும் நடிகைகள் பலரும் ஏற்கெனவே தமிழில் அறிமுகமானவர்கள்தான்.
கோடம்பாக்கத்தில் கால்பதித்தால் ஹாலிவுட் வரை கோலோச்சலாம் என்ற அசாத்தியமான நம்பிக்கை நடிகைகள் மத்தியில் நிலவுவதில் ஆச்சரியமில்லை. பிரியங்கா சோப்ராவும்கூட தமிழில் நடித்த பிறகு இந்தியில் பிரபலமாகி, இப்போது ஹாலிவுட்டில் அசத்தி வருகிறார்.
இந்த ஆண்டு வழக்கம்போல் புது நாயகிகளின் வரவு கோடம்பாக்கத்தைக் களைகட்ட வைத்துள்ளது. தீவிர சினிமா ரசிகர்களுக்காக அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள்.
சைத்ரா
இவர் பிறந்தது, வசிப்பது பெங்களூரில் என்றாலும் தமிழில் சரளமாகப் பேசுவார். நல்ல பாடகியும்கூட.
நடிப்புக்கு அடுத்தபடியாக பாடகியாகவும் ‘சர்வஜனிகரிகே சுவர்ணவகஷா’ கன்னடப் படத்துக்காக ஒரு விருதைப் பெற்றுள்ளார்.
தமிழில் ‘3BHK’ படத்தில் நடித்துள்ள இவர், முறைப்படி நடனம் கற்றுக்கொண்டவர். அடுத்து, தமிழில் சசிகுமாருடன் ‘மை லார்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளாராம். இது ராஜு முருகன் இயக்கியுள்ள படம். விரைவில் தமிழிலும் தனது பாடலும் குரலும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் என்கிறார் சைத்ரா.
கயாது லோஹர்
பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ படத்தில் நடித்த கயாது லோஹர்தான் தற்போது இளையர்களின் புதிய கனவுக்கன்னி எனலாம். இவரைக் கோடம்பாக்கத்துக்கு அழைத்துவந்த பெருமை ‘இதயம் முரளி’ பட இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனைத்தான் சேரும்.
தொடர்புடைய செய்திகள்
‘டிராகன்’ படம் பெற்ற பெரும் வசூல் வெற்றியால் கன்னடம், மலையாளம், மராத்தி எனப் பல மொழிகளில் நடிக்கக் கேட்டு வரிசையில் காத்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
பூர்வீகம் அசாம் என்றாலும் கயாது வசிப்பது புனே நகரில். வணிகத் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
கயாது என்பது சமசுகிருத வார்த்தையாம். இவரது பெற்றோர் ஒருமுறை தொலைக்காட்சியில் ஒரு புராணத் தொடரைப் பார்த்தபோது அதில் வந்த ‘கயாது’ என்ற கதாபாத்திரத்தின் பெயரையே மகளுக்கும் சூட்டிவிட்டனர்.
தற்போது ஜி.வி.பிரகாஷுடன் ‘இம்மார்ட்டல்’, ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் என அரை டஜன் படங்களைக் கையில் வைத்திருக்கிறார் கயாது.
ருக்மிணி வசந்த்
விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’, சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ என்று நல்ல வாய்ப்புகளைத் தந்து ருக்மிணி வசந்தை வரவேற்றுள்ளது தமிழ்த் திரையுலகம்.
இவரது தந்தை வசந்த் வேணுகோபால் இந்திய ராணுவத்தின் உயரிய அசோக சக்ரா விருதைப் பெற்றவர்.
‘மதராஸி’ படத்தில் நடித்த அனுபவத்தால் இப்போது தமிழில் நன்கு பேசுகிறார்.
தற்போது கன்னட நடிகர் யாஷுடன் ‘டாக்ஸிக்’, ரிஷப் ஷெட்டியுடன் ‘காந்தாரா: சாப்டர்-1’ எனப் பெரிய படங்களில் நடித்து முடித்திருப்பவர் ‘டிராகன்’ தெலுங்கு மறுபதிப்பிலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
“எனக்கு எண்ணிக்கை முக்கியமல்ல. மனத்துக்குப் பிடித்த கதைகளுக்கே முன்னுரிமை,” என்கிறார் ருக்மிணி.
சான்வி மேக்னா
‘குடும்பஸ்தன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் சான்வி மேக்னா. படம் வெளியான பிறகு, ‘உங்களைப் போன்ற மனைவிதான் வேண்டும்’ எனப் பல ரசிகர்கள் இவருக்கு இன்ஸ்டகிராம் மூலம் தொடர் தகவல் அனுப்பினார்களாம்.
ஹைதராபாத் கல்லூரியில் படித்தபோது கலை நிகழ்ச்சிகளில் அசத்தியதுடன், கல்லூரியில் குறும்படம் எடுக்க வந்த குழுவுக்கு இயன்ற உதவிகளைச் செய்யப்போக, அதுவே நடிப்புக்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்ததாம்.
‘பிலால்பூர் போலிஸ் ஸ்டேஷன்’ என்ற இணையத்தொடர் மூலம் தெலுங்குத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சான்வி.
அதன் பிறகு, சில படங்களில் நடித்திருந்தாலும், இளம் இசைக் கலைஞர் சாய் அப்யங்கருடன் இவர் பாடிய ‘விழி வீக்குற’ என்ற தனி இசைப்பாடல் இளையர்கள் மத்தியில் சான்விக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளது.
மமிதா பைஜு
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மமிதா பைஜுவைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா படம், விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’ என இவர் நடிக்கும் படங்களின் பட்டியல் நீளமாக உள்ளது.
தென்னிந்தியாவின் ‘டாப் 10’ நடிகைகளின் பட்டியலில் குறுகிய காலத்தில் இடம்பிடித்த இவரை, ‘ரெபல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தியவர் ஜி.வி.பிரகாஷ்தான்.
கேரளாவின் கோட்டயம் பகுதியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மமிதாவுக்கு சினிமா வாய்ப்பு தேடிவர, படிப்பை ஒதுக்கிவிட்டு இருகரம் நீட்டி வாய்ப்பை வரவேற்றாராம்.
எதார்த்தமான நடிப்பு, அழகான சிரிப்பு என்று ரசிகர்களின் மனத்தைக் கொள்ளையடித்துள்ள மமிதாவுக்குச் சிறப்பான எதிர்காலம் இருப்பதாக அவருடன் நடித்த பலரும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.
‘லவ் மேரேஜ்’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த சுஷ்மிதா பட், இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த மால்வி மல்ஹோத்ரா (ஜென்ம நட்சத்திரம்), ‘பெருசு’ படத்தில் நடித்துள்ள நிஹாரிகா என அறிமுக நாயகிகளின் பட்டியல் சற்று பெரிதாகவே உள்ளது.