‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ஓம்’.
செம்மரக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு சண்டைகள், திகில் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தில், மலையாள நடிகர் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் மம்முட்டி, தனது கதாபாத்திரம் குறித்துப் பேசியது அரங்கத்தைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
“இந்தப் படத்தில் எனக்குப் பெரிதாக வசனங்கள் எதுவுமே இல்லை. படம் முழுவதும் எல்லாக் காட்சிகளிலும் ‘கணேசா, தண்டியப்பா’ என்று யாரையாவது அழைத்தபடி இருக்க வேண்டும். அதைத் தவிர வேறு வசனம் கிடையாது.
“மேலும், ‘அவரை அடி, இவரை அடி’ என்று சொல்ல வேண்டும். இதெல்லாம் ஒரு வேடமா?, கதாபாத்திரமா? ஆனால், ஆறு மாதங்களாக இதைத்தான் செய்துகொண்டிருந்தேன்,” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் மம்மூட்டி.
அவரது இயல்பான நையாண்டியைக் கேட்டு, பட நாயகன் தனுஷ் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் மம்முட்டி மறக்கவில்லை.
“நான் தமிழில் கிட்டத்தட்ட 20 படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். குறைவான படங்களில் நடித்திருந்தாலும்கூட, தமிழ் ரசிகர்களுக்கு என்னை நன்றாகத் தெரிகிறது.
“நீங்கள் என்னுடைய மலையாளப் படங்களைத் தேடிப் பார்ப்பதும் எனக்குக் கைதட்டல் கொடுப்பதும் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது,” எனத் தனது நன்றியைப் பதிவு செய்தார் மம்முட்டி.
இதனிடையே, தனுஷை மையப்படுத்தி உருவான சர்ச்சை ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.
‘திமிர் பிடித்த தனுஷ்’ என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பலரும் தனுஷை விமர்சித்த நிலையில், அதற்குக் காரணமான சர்ச்சைக்கு, ஆடை வடிவமைப்பாளரான தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனுஷும் காவ்யாவும் கடந்த ஆண்டு இந்தி இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான ‘தேரே இஷ்க் மே’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றினர்.
இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக மும்பை சென்றிருந்தபோது, பொது இடத்தில் தனுஷின் ஆடை சற்று சுருங்கியிருந்ததைக் கவனித்த காவ்யா ஸ்ரீராம், ஓடி வந்து அதனைச் சரிசெய்தார். ஆனால், தனுஷ் இதைக் கவனிக்கவில்லை.
அவர் தொடர்ந்து நடந்துசென்ற நிலையில், அந்தக் காணொளி இணையத்தில் பரவியது. அதைப் பார்த்த பலரும், ‘தனுஷுக்கு எவ்வளவு திமிர்’ எனக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய தனுஷ், இந்தச் சர்ச்சைக்குப் பின்னால் இருந்த உண்மையை உடைத்துள்ளார்.
மேடையில் காவ்யா ஸ்ரீராமின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், “காவ்யா தனி ஆளாக நின்று கடினமாக உழைப்பவர். ‘தேரே இஷ்க் மே’ விளம்பர நிகழ்வின்போது என் கால்சட்டை பின்புறம் திரும்பியிருந்ததை நான் கவனிக்கவில்லை. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல், அவர் ஓடிவந்து அதைச் சரிசெய்தார்,” என்றார்.
மேலும் நகைச்சுவையாகத் தொடர்ந்த தனுஷ், “அவர் சரிசெய்ததுகூட எனக்குத் தெரியாது. என் போக்கில் நடந்து போய்விட்டேன். ஆனால், ‘இவனுக்கு எவ்வளவு திமிர் பார்’ எனச் சமூக ஊடகங்களில் நான்தான் திட்டு வாங்கினேன்.
“காவ்யா, நீங்கள் சில நேரங்களில் கொஞ்சம் குறைவாக வேலை செய்யலாம் என நினைக்கிறேன், நன்றி,” எனக் கலகலப்பாகவும் குறிப்பிட்டார்.
