‘பராசக்தி’ திரைப்பட உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த படத்தின் கலைஞர்கள்.
சிவகார்த்திகேயன், ரவி மோகன் (ஜெயம் ரவி), அதர்வா முரளி, ஸ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘பராசக்தி’. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், தமிழின் பெருமையைச் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
முன்னதாக, இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் பிரத்யேக நிகழ்வு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, “திரைப்படம் மூலம் நாம் ஒவ்வொரு வாழ்வியலிலும் போய் வாழலாம். ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை உலகில் வாழ்ந்தது போல், ‘பராசக்தி’ படத்தில் நம் வரலாற்றுக் காலத்திற்குள் நுழைந்து பார்த்திருக்கிறோம். நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் எனும் கருத்து என்னை மிகவும் பாதித்தது. அந்த 1960களின் உலகைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளோம். அந்த காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்துவிட்டு வந்ததுபோல் ஓர் உணர்வு இருக்கிறது,” என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “சுதா மேடம் இந்தக் கதையை 1960களில் நடப்பதாக அமைத்து, இதற்காக 4 முதல் 5 ஆண்டுகள் உழைத்துள்ளார். அவர் சொன்னதைச் செய்தாலே போதும் என்ற அளவிற்குத் தெளிவாக இருந்தார். இந்தப் படத்தில் பணியாற்றியது அனைவருக்கும் சவாலான ஒன்று.
“அதர்வாவிற்கும் எனக்கும் உள்ள நட்பு உண்மையான அண்ணன்-தம்பி போன்றது. அவரின் முதல் பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நான்தான் தொகுப்பாளராக இருந்தேன். இன்று அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. ஸ்ரீலீலாவை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.
“ரவி மோகன் சார் இந்தப் படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தது எனக்கு ஆச்சரியம். முன்னணி நாயகனாக இருக்கும்போதே வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது அவரது பெரிய மனதைக் காட்டுகிறது. அவர் எப்போதும் எங்களுக்கு ‘ஹீரோ’தான்; எங்கள் குழுவில் அவரே மூத்தவர், அவர் பெயர்தான் முதலில் படத்தில் இடம்பெறும்.
“இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் 100 படங்களை முடித்து சாதனை செய்துள்ளார். தயாரிப்பாளர் ஆகாஷ் கேட்டுக் கொண்டதற்காகவே இது எனது 25வது படமாக அமைந்தது. ‘பராசக்தி’ ஒரு முக்கியமான பிரச்சினையைப் பேசும் படமாகவும் அதே சமயம் காதல், பாசம், வீரம் என அனைத்தும் கலந்த பொங்கல் கொண்டாட்டமாகவும் இருக்கும்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
நடிகர் ரவி மோகன் பேசுகையில், “இந்தப்படம் மிகப்பிரம்மாண்டமானது. தொடக்கத்தில் எனக்குத் தயக்கம் இருந்தாலும் படக்குழுவின் உழைப்பைப் பார்த்த பிறகு மலைப்பாக இருந்தது. சுதா கொங்கரா என்னைச் சரியாக அந்த கதைக்குள் சேர்த்துவிட்டார். அதர்வாவிற்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும். சிவகார்த்திகேயன் என் மீது மிகுந்த அன்பு காட்டினார். அவரது 25வது படத்தில் நானும் இருப்பது பெருமை,” என்றார்.
ஜி.வி. பிரகாஷ், “‘மதராஸப்பட்டினம்’ ஏற்கெனவே வரலாற்றுப் படமாக அமைந்ததால், அதிலிருந்து ‘பராசக்தி’ எப்படி மாறுபடும் என்பதில் கவனமாக இருந்தோம். ஒரு பெரிய புரட்சியை இசையாக மாற்ற முயற்சித்திருக்கிறோம்,” என்றார்.
நடிகை ஸ்ரீலீலா பேசுகையில், “இது எனது முதல் தமிழ்ப்படம். இப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது,” என்றார்.
நடிகர் அதர்வா, “ஜி.வியின் 100வது படம், சிவாவின் 25வது படம் எனப் பல சிறப்புகள் இதில் உள்ளன. தயாரிப்பாளர் ஆகாஷிற்கு நன்றி,” என்றார்.
வள்ளுவர் கோட்டத்தில் 1960களின் காலகட்டத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வாகனங்கள், ரயில் நிலையம், ரயில் பெட்டிகள், அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் டிசம்பர் 19, 20, 21 ஆகிய மூன்று நாள்களும் இந்த ‘பராசக்தி’ உலகத்தை நேரில் கண்டு ரசிக்கலாம்.
இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.

