‘இட்லி கடை’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருண் விஜய், மீண்டும் கதாநாயகனாக களமிறங்கியிருக்கும் படம் ‘ரெட்ட தல’.
கிருஷ் திருகுமரன் இயக்கியுள்ளார். படம் வரும் 25ஆம் தேதி திரைகாண உள்ளது.
இந்நிலையில், இயக்குநரையும் அவரது உதவியாளரையும் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்துள்ளார் அருண் விஜய்.
கண்ணில் படும் அனைவரிடமும் இதைச் சொல்லிப் பூரித்துப்போகிறார் கிருஷ் திருகுமரன். இதுவரை சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு அருண் விஜய் வெளியாட்கள் யாரையுமே அழைத்துச் சென்றதில்லையாம்.
‘முதன்முறையாக உங்கள் குழுவைத்தான் அழைத்துச் சென்றுள்ளார்’ என்று அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார் தம்மிடம் கூறியதாகச் சொல்கிறார் கிருஷ் திருகுமரன்.
“அதைக் கேட்டதும் அது சாதாரண விருந்தல்ல, பெருமைக்குரிய விருந்து என்பதை உணர்ந்தேன். அதனால்தான் பார்க்கும் எல்லோரிடமும் இந்தத் தகவலைப் பகிர்கிறேன்.
“பொதுவாக, எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் உடல் அளவிலும் மனத்தளவிலும் முழுமையாகத் தயாராகிவிடுவார் அருண். ஒரு கதையில் அவர் எளிதில் மனநிறைவு அடைய மாட்டார். தனக்குத் திருப்தி ஏற்படும் வரை கதையை மெருகேற்றுவதில் முனைப்பு காட்டுவார்.
“முதலில் முழுக் கதையையும் கேட்டுவிடுவார். பின்னர் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பல்வேறு விளக்கங்களைக் கேட்பார். ஆகக் கடைசியாக சில முக்கியமான காட்சிகள், குறிப்புகள் ஆகியவற்றை மட்டும் கேட்டு அவற்றை எப்படி மெருகேற்றலாம், தான் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதையெல்லாம் விவாதித்த பிறகே படப்பிடிப்புக்குத் தயாராவார்.
“இந்தக் கதையை அவர் எந்த அளவுக்கு ரசித்துள்ளார் என்பதற்கு அவர் அளித்த விருந்துதான் சாட்சி. பொதுவாக அருண் விஜய் கதை கேட்கும் விதமே அலாதியானது,” என்று குங்குமம் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கிருஷ் திருகுமரன் கூறியுள்ளார்.
காதலும் பணமும் ஒன்றுசேரும் இடத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதுதான் இப்படத்தின் கதைக்கரு.
காதலிக்கும் பெண்ணுக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று நினைக்கும் ஒரு இளைஞன், அந்தக் காதலுக்கு அந்தப் பெண் தகுதியானவரா என்ற கேள்வி ஆகியவற்றைச் சுற்றித்தான் படத்தின் காட்சிகள் நகருமாம்.
இந்தக் காதல், நாயகனுக்குப் பல பாடங்களைத் கற்றுத் தருகிறது. அவை எவ்வாறு உதவின என்பதுதான் இந்தப் படத்தில் சுவாரசியமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு இரட்டை வேடங்கள். படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். மேலும், ஹரிஷ் ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
மூன்று கதாநாயகிகள் குறித்து இப்போதே விவரமாகக் கூற முடியாதாம். சித்தி ஹர்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோருடன் மேலும் ஒரு நாயகி நடித்துள்ளார்.
“ஆனால், அவர் யார் என்பதை இப்போதே கூறிவிட்டால் சுவாரசியம் போய்விடும். எனினும் முப்பெரும் தேவியரான சரஸ்வதி, மகாலட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் குணங்களையும் பிரதிபலிப்பது போன்று அவர்களின் கதாபாத்திரங்களை அமைத்துள்ளேன். அனைவருமே சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
“நான் திரையுலகில் இருந்து குறுகிய காலத்தில் பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்குத் தெரிந்து ஒரு படம் வெற்றி பெற வேண்டுமென்றால் கதாசிரியர்கள் கதை எழுத வேண்டும். அதை இயக்குநர்கள் படமாக்க வேண்டும். முன்பெல்லாம் இப்படித்தான் நடந்தது. கதாசிரியர்கள்தான் கற்பனையாளர்களாக மாறி, நிறைய கதை சொல்வார்கள்.
“அதனால்தான் இன்று வெளியாகும் பல படங்கள், நன்றாக உருவாகி இருந்தாலும்கூட, எதிர்மறை விமர்சனங்களைப் பெறுகின்றன. இன்று நிறைய எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து ஒவ்வொரு இயக்குநரும் தன்னுடன் வைத்திருந்தாலே நிறைய நல்ல கதைகள் கிடைக்கும்,” என்கிறார் கிருஷ் திருகுமரன்.

