தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அருண் விஜய்: தனுஷுடன் அதிகம் பழக்கமில்லை, ஆனாலும் நன்றாகப் பார்த்துக்கொண்டார்

2 mins read
d46c3dbc-df0f-4a2e-9bc2-3c1157e1de8c
‘இட்லி கடை’ படத்தில் அருண் விஜய், தனுஷ். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

‘இட்லி கடை’ படத்தில் தனக்கு அதிக முக்கியத்துவம் இருக்குமாறு தனுஷ் பார்த்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகக் கூறியுள்ளார் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு மீண்டும் வில்லனாக ‘இட்லி கடை’யில் அசத்தி இருக்கிறார் அருண் விஜய்.

‘இட்லி கடை’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் கதை மண் சார்ந்திருந்ததாலும் தன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்ததாலும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அருண் விஜய் கூறினார்.

“எனக்கு, தனுசுடன் இதற்கு முன் அதிகம் பழக்கமில்லை. ஆனால், ‘இட்லி கடை’யில் அவர் என்மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப் போகாமல், மிகவும் அருமையாகப் பார்த்துக்கொண்டார்,” என்று அருண் விஜய் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தனுஷின் நடிப்புத் திறமையும், ‘ராயன்’ போன்ற படங்களை அவர் இயக்கிய விதமும் தனக்குப் பிடிக்கும் என்றும் அனைத்து கதாபாத்திரங்களையும் அவர் அழகாக வழிநடத்தினார் என்றும் பாராட்டினார்.

‘இட்லி கடை’ படத்துக்காக திரையரங்குக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அருண் விஜய், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தொடர்ந்து நடிப்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்திருப்பதாகக் கூறினார்.

‘ரெட்ட தல’ படத்தின் ஒரு சிறிய பகுதியை தனுஷிடம் காட்டியதாகவும் அவர் பாராட்டியதாகவும் அருண் விஜய் தெரிவித்தார். இந்தப் படத்துக்காக தனுஷ் ஒரு பாடல் பாடினதாகவும் அந்தப் பாடல் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார். இதுவரை தான் நடித்த படங்களிலேயே ‘ரெட்ட தல’ மிக முக்கியமான படமாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

“நான், உங்களோட தில் ரூபா ரசிகர்,” என்று தனுஷ் தன்னைப் பாராட்டியதாகவும் தன்னுடைய எல்லாப் படங்களையும் அவர் பார்த்திருப்பதாகவும் அருண் விஜய் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் உற்சாகமாக இருக்கும் சத்யராஜ், கவுண்டமணி ஆகியோருடனான உறவு பற்றிப் பேசும்போது நேரம் போவதே தெரியாது என்று பகிர்ந்துகொண்டார்.

‘இட்லி கடை’யில் ராஜ்கிரணுடன் தனக்கு காட்சிகள் இல்லாவிட்டாலும், ‘பாண்டவர் பூமி’யில் அவர் கொடுத்த உற்சாகத்தை இன்றும் தான் மறக்கவில்லை என்று கூறினார்.

ஷாலினி பாண்டே தமிழ் தெரியாமல் மனப்பாடம் செய்து உணர்ச்சிகரமாக நடித்ததைப் பாராட்டினார். நித்யா மேனன் ஓர் அற்புதமான நடிகை என்றும் புகழ்ந்தார் அருண் விஜய்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதனுஷ்