சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தைத் தயாரித்துள்ளார் அவரது நண்பரும் நடிகருமான ஆர்யா.
இப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய படத்தின் நாயகன் சந்தானம், தனக்கு ‘நகைச்சுவை சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் கொடுத்தது ஆர்யாதான் என்றார்.
“நானும் ஆர்யாவும் ஒருவருக்கொருவர் அறிமுகமான புதிதில் நான் சாதாரண நடிகராகத்தான் இருந்தேன். அப்போதே எனக்கு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்து, ‘சேட்டை’ படத்தலைப்பில் இடம்பெறச் செய்தார்.
“பின்னர் ‘லிங்கா’ படத்தில் நடித்தபோது, ‘நீங்கதான் அந்த நகைச்சுவை சூப்பர் ஸ்டாரா’ எனக் கேட்டார் ரஜினி. அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில், மாட்டிவிட்டது ஆர்யாதான்.
“இதை ரஜினியிடம் கூறி, ‘ஆர்யாதான் இப்படி தலைப்பில் போட்டார்’ என்றேன். உடனே, ‘நீங்கள் சொல்லாமலா’ என ரஜினி கேட்டார்.
“அதன்பிறகு, நானும் ஆர்யாவும் எந்த வேலையாக இருந்தாலும் பயப்படாமல், கவலைப்படாமல் செய்தோம். அப்படித்தான் இந்தப் படத்தையும் ஆர்யா தயாரித்துள்ளார்.
“ராமாயணத்தில் ராமர் புகழ்பெற சீதை, லட்சுமணன், ராவணன் உள்ளிட்ட பலர் காரணம். அதேபோல் நான் வெற்றிபெற எனது நகைச்சுவைக் குழுவினர், என் குடும்பத்தினர் எனப் பலர் காரணமாக உள்ளனர்,” என்றார் சந்தானம்.

