தெருக்கூத்து கலையை மையமாக வைத்து ‘ஆர்யமாலா’ என்ற தலைப்பில் புதுப்படம் ஒன்று உருவாகிறது. ஏற்கெனவே தெருக்கூத்து கலையின் பெருமைகளை எடுத்துக்கூறும் சில படைப்புகள் வெளியீடு கண்டிருந்தாலும் தனது படம் மிகவும் வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர்.
இப்படத்தில் ‘பீச்சாங்கை’ படப்புகழ் ஆர்.எஸ்.கார்த்தி நாயகனாக நடிக்க, மனிஷா ஜித் நாயகியாக நடித்துள்ளார். இசை செல்வநம்பி. கடந்த 1980களில் கதை நடப்பதாக சித்திரிக்கப்பட்டுள்ளதாம்.
“தெருக்கூத்து கலையின் பெருமையை விளக்குவதன் மூலம், ஓர் அழகான காதல் கதையை விவரித்துள்ளோம். தமிழ் சினிமாவில் மூத்த ஜாம்பவான் நடிகர்களான காலஞ்சென்ற பி.யூ.சின்னப்பா, சிவாஜி கணேசன் போன்றோர் நடிப்பில் பிரபலமான ‘ஆர்யமாலா காத்தவராயன்’ எனும் புராண நாடகத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது,” என்று தயாரிப்புத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கதாநாயகியை மையப்படுத்தும் கதையில், நாயகியாக அருமையான நடிப்பை வழங்கியுள்ளார் மனிஷாஜித். இவர் குழந்தை நட்சத்திரமாக சரத்குமார் நடித்த ‘கம்பீரம்’ படத்தில் அவரது மகளாக நடித்தவர். பின்னர் ‘விந்தை’, ‘பிழை’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
நாயகன் கார்த்திக் தெருக்கூத்து கலைஞராக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகப் பாராட்டுகிறார் இயக்குநர்.
“மறைந்த பின்னணிப் பாடகி பவதாரிணி இப்படத்தில் ‘அத்தி பூவப்போல’ என்கிற பாடலைப் பாடியுள்ளார். வரும் 18ஆம் தேதி இந்தப்படம் வெளியீடு காண உள்ளது. ரசிகர்கள் இந்தப் படைப்பை ஆதரிப்பார்கள் என உறுதியாக நம்புகிறோம்,” என்கிறார் இயக்குநர் ஜேம்ஸ்.
யுவன், வடலூர் ஜெ.சுதா ராஜலட்சுமி ஆகிய இருவரும் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.