கடந்த 20 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார் அசோக் குமார்.
தற்போது தனது பெயரை ஏகேபி என்று மாற்றிக்கொண்டுள்ள அவர், ‘முருகா’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர்.
20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட பிறகும் தனக்கான அங்கீகாரத்துக்காகவும் வெளிச்சத்துக்காகவும் இன்றளவும் சளைக்காமல் உழைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ஏகேபி.
திருவையாற்றில் பிறந்து மும்பையில் வளர்ந்த ஏகேபி, செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முடித்தவர்.
சிறு வயதிலேயே நடிப்பு, நடனத்தில் ஆர்வம் கொண்ட அவர், 1995ல் புகழ்பெற்ற ‘ஸ்ரீகிருஷ்ணா’ தொலைக்காட்சித் தொடரில் குட்டி கிருஷ்ணனாக நடித்து, மகாராஷ்டிரா அரசின் விருதையும் பெற்றவர்.
பரதநாட்டியம், ஜிம்னாஸ்டிக், சண்டைப் பயிற்சிகள் என ஒரு முழுமையான நடிகனுக்குரிய அத்தனை தகுதிகளையும் வளர்த்துக் கொண்ட பின்னரே தமிழ்த் திரையுலகில் கால்பதித்தார்.
தமிழில் சசி இயக்கத்தில் வெளிவந்த ‘டிஷ்யூம்’ படத்தில் கதாநாயகனாக முதலில் ஒப்பந்தமானது இவர்தானாம். 15 நாள்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், எதிர்பாராத காரணங்களால் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. எனினும் தளராத மனத்துடன் போராடி, 2007ல் ‘முருகா’ படத்தின்மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி துணை நடிகராக ரூ.250 சம்பளத்தில் நடித்திருந்தாராம்.
இதையடுத்து, ‘பிடிச்சிருக்கு’, ‘கோழி கூவுது’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’, ‘ஆர் யூ ஓகே பேபி’ போன்ற பல தரமான படைப்புகளில் நடித்தபோதிலும், திறமைக்கேற்ற மிகப்பெரிய வெற்றிப் படம் அமையவில்லையே என்ற ஆதங்கம் ஏகேபிக்கு உள்ளது.
தாம் நடித்த ஏழு படங்கள் வெளியாகாமல் போனதும், மணிரத்னத்தின் ‘ராவணன்’ போன்ற பெரிய வாய்ப்புகள் கைநழுவியதும் தமது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட பெரும் சவால்கள் நிறைந்த சூழல் என்கிறார் ஏகேபி.
எனினும், அனைத்தையும் கடந்து ‘கிட்டி’, ‘வட மஞ்சு விரட்டு’ எனத் தமது நடிப்பில் உருவாகியுள்ள அடுத்தடுத்த படங்களின் வெளியீட்டுக்காக காத்திருப்பதாகச் சொல்கிறார்.
இன்று திரையுலகில் நிலவும் வாரிசு, சந்தைப் போட்டிக்கு இடையே, தனக்கென ஓர் இடத்தை உருவாக்கத் தன் தந்தை பாலகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத் தன் பெயரை ‘ஏகேபி’ (அஷோக் குமார் பாலகிருஷ்ணன்) என மாற்றியுள்ளாராம்.
“என்னிடம் நிறைய திறமைகள் உள்ளன. ஆனாலும் இதுவரை ஏன் ஒரு பெரிய வெற்றிப் படம் அமையவில்லை எனத் தெரியவில்லை. திறமையைக் கொடுத்த இறைவன் கண்டிப்பாக ஒரு வெற்றியைத் தருவார் என நம்புகிறேன்,” என்கிறார் அசோக்குமார்.


