அட்லீயின் மனைவி பிரியா தொடங்கியிருக்கும் புதிய தொழில்

2 mins read
1c1808ba-fe7f-4ed8-b6cc-6aa8266dfd4a
கணவர் அட்லீயுடன் பிரியா. - படம்: ஊடகம்

இயக்குநர் அட்லீயின் மனைவியும் நடிகையுமான பிரியா அட்லீ புதிய தொழில் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

ஆர்யா, சூரி உட்படப் பல நடிகர், நடிகைகள் ஹோட்டல் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

நடிகர்கள், இயக்குநர்கள் என சினிமா பிரபலங்கள் பலரும் திரைத்துறையைத் தாண்டி மற்ற தொழில்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஹோட்டல், ஆடை எனப் பல துறைகளில் களமிறங்கி வெற்றி பெற்று வருகிறார்கள்.

பிரியா அட்லீ விஜய் டி.வியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து, ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அதன் பிறகு ‘சிங்கம்’ திரைப்படத்தில் நடித்தவர், அட்லீ இயக்கிய ஒரு குறும்படத்திலும் நடித்திருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தவர், அண்மைக்காலமாக அட்லீயுடன் இணைந்து படங்களைத் தயாரித்தும் வருகிறார். அட்லீயுடன் இணைந்து ‘ஏ ஃபார் ஆப்பிள் (A for apple)’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அர்ஜூன் தாஸ் நடித்திருந்த ‘அந்தகாரம்’ திரைப்படத்தைத் தயாரித்தார்.

அடுத்ததாக வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வருகிற ‘பேபி ஜான்’ என்ற பாலிவுட் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படியான வேலைகளை சினிமாவில் கவனித்து வந்தவர், தற்போது ஆடைத்தொழில் பக்கமும் தமது கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.

‘ரெட் நாட்( Red Knot)’ என்ற பெயரில் புதிய ஆடை நிறுவனத்தைத் தற்போது இவர் தொடங்கியிருக்கிறார். இவருடைய பிராண்ட் ஆடைகள் விற்பனை செய்யப்படும் இணையத்தளத்தையும் அறிமுகம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் ஊடகப் பக்கத்தில், “இந்தத் தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமான விஷயம். என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான இந்த ‘ரெட் நாட் ஆடை பிராண்ட்’ என்பது என்னுடைய கனவு,” எனப் பதிவிட்டிருக்கிறார். பிரியா அட்லீயின் இந்தப் புதிய தொழில் வெற்றிபெற பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்