இந்தியத் திரையுலகில் அனைத்து நடிகர்களும் இணைந்து பணிசெய்ய விரும்பும் இயக்குநர்களுள் ஒருவர் அட்லி. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்.
அப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையவே, விஜய்யை இயக்க வாய்ப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய அனைத்துப் படங்களும் வசூலை குவித்தன.
தனது முதல் இந்திப் படமான ‘ஜவான்’ மூலம் அட்லி ரூ.1,000 கோடி வசூல் செய்தார். இந்நிலையில், தெலுங்குத் திரையுலகில் கால்பதிக்க நினைத்தவர் அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படம் இயக்கத் திட்டமிட்டு வருகிறார்.
அல்லுவை இயக்கத் தயாரிப்பாளரிடம் அட்லி 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இப்படம் அட்லியைவிட்டு கை நழுவ வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, இந்தித் திரையுலகில் சல்மான் கானுடன் ஒரு படத்தைத் தொடங்கிய அட்லி, அதன் செலவுக்குத் தயாரிப்பாளர் கட்டுப்பாடுகள் விதித்த காரணத்தால் அதைக் கைவிட்டார்.
பொதுவாக பெரிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் தொகை என்பதால், அட்லியின் கோரிக்கை பல தயாரிப்பாளர்களை வாயடைத்துப் போகச்செய்துள்ளது.

