பன்னிரண்டு ஆண்டுகளுக்கு நீடித்த பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு கண்ட பின்னர் வரும் பொங்கல் பண்டிகையின்போது திரைகாண உள்ளது ‘மத கஜ ராஜா’.
இதையடுத்து, நீண்டகாலமாக முடங்கியுள்ள ‘துருவ நட்சத்திரம்’, ‘நரகாசூரன்’ உள்ளிட்ட படங்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ளது ‘துருவ நட்சத்திரம்’ படம். சில ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து பணிகளும் முடிந்து வெளியீடு காணத் தயாராக இருந்தது இப்படம்.
இன்னும் சில சிக்கல்களால் இதுவரை வெளியீடு சாத்தியமாகவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும் கடைசி நேரத்தில் படம் வெளியாகவில்லை. இதே போல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘நரகாசுரன்’ படமும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக முடங்கியுள்ளது.
இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
பிறகு ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இப்படி மேலும் பலபடங்கள் சில சிக்கல்கள் காரணமாக திரை காணாமல் முடங்கியுள்ளன.
இதனால் இந்தப்படங்களுக்காக முதலீடு செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணம் முடங்கியுள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடங்கியுள்ள படங்களை வெளியிடுவதற்கு சில தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.