‘ஜனநாயகன்’ படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, மேலும் சில படங்களுக்குத் தணிக்கை வாரியம் கிடுக்கிப்பிடி போட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த வகையில், ஜீவா நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘ஜிப்சி’ படத்தில் தணிக்கை வாரியம் 48 இடங்களில் கத்திரி வைத்ததாம்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற புதுப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது இத்தகவலைக் குறிப்பிட்டார் ஜீவா.
‘ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ள படம் இது. தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜனவரி 17ஆம் தேதி திரைகாண உள்ள நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பின் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா, தணிக்கை வாரியம் தன்னைத்தான் முதலில் குறிவைத்தது என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
“ஒருவழியாக தணிக்கை வாரியத்தைச் சமாளித்து நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் ‘கொவிட்-19’ தொற்றுப் பரவல் தொடங்கிவிட்டது. ‘சென்சார்’, கொரோனா என்ற இரண்டு ‘சி’ யும் எங்களுக்கு நிறைய சிரமங்களைக் கொடுத்தன,” என்றார் ஜீவா.
விஜய்யுடன் ‘நண்பன்’ படத்தில் இணைந்து நடித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அது உற்சாகமான அனுபவம் என்றும் விஜய் மீண்டும் நடிக்க வந்தால் அவருடன் இணைந்து நடிக்க ஆர்வத்துடன் உள்ளேன் என்றும் குறிப்பிட்டார்.
ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. எனவே, ரசிகர்களுக்கு ஒரு வெற்றிப் படத்தை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அந்த வெற்றியை ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் பெற்றுத்தரும் என உறுதியாக நம்புகிறாராம்.
நடிகர் தம்பி ராமையா பேசுகையில், கடந்த ஒரு சில ஆண்டுகளாக நான் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டுகளில் நடித்து சிறிதளவு நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை,” என்றார்.

