நாயகனான பின்னர் நகைச்சுவை வேடங்களில் நடிக்காமல் இருந்த சந்தானம் தற்போது மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க சம்மதித்துள்ளார்.
தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் சந்தானம். இவர் இல்லாத படமே தமிழ் சினிமாவில் இல்லை என சொல்லும் அளவுக்கு ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த சந்தானம், ஒரு கட்டத்தில் நகைச்சுவை வேடங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு நாயகனாக களமிறங்கினார்.
இவர் நாயகனாக நடித்த படங்களிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தாலும் அவரால் வெற்றியை ருசிக்க முடியவில்லை. குறிப்பாக கொரோனா காலகட்டத்துக்கு பின் சந்தானம் நாயகனாக நடித்த படங்கள் தொடர் தோல்விகளைச் சந்தித்தது.
என்னதான் சந்தானம் நாயகனாக நடித்தாலும், அவர் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை ரசிகர்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதற்கு அண்மையில் வெளியான ‘மதகஜராஜா’ படமே ஒரு எடுத்துக்காட்டு.
அப்படத்தில் சந்தானத்தின் நகைச்சுவையைப் பார்த்து வயிறுகுலுங்க சிரிக்கும் ரசிகர்கள், அவரை மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். தற்போது ரசிகர்களின் கோரிக்கைக்கு சந்தானம் செவி சாய்த்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அவர் அடுத்தடுத்து மூன்று படங்களில் நகைச்சுவைக் கலைஞராக நடிக்க உள்ளார். அதில் ஒரு படத்தில் நடிகர் ரவி மோகனுடன் சேர்ந்து நடிக்க உள்ளாராம்.
மற்ற இரண்டு படங்களில் ஆர்யாவுடனும் விஷாலுடனும் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சந்தானம்.
அவரின் இந்த முடிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் தான் விட்டுச் சென்ற வெற்றிடத்தை மீண்டும் அவரே நிரப்ப வந்துள்ளதால் இனி சந்தானத்தின் திரை வாழ்க்கை மீண்டும் அமோகமாக உயரும் என்கிறது கோலிவுட்.