உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தன்னை நடிகர் என்று கூறும் தைரியம் உண்டு: நடிகை ஊர்வசி புகழாரம்
கடந்த மூன்று வருடங்களில் தமிழ், தெலுங்கு என தென்னிந்தியத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்து ஒவ்வொரு படத்திலும் கதாநாயகனாக இல்லாமல் அதே சமயம் வில்லனாக, குணச்சித்திர நடிகராக மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அந்தப் படங்களில் தனது நடிப்பை பாராட்டிப் பேசும் விதமாக வைத்து விடுகிறார் பஹத் பாசில். அவர் பெரும்பாலும் பேட்டிகளில் பேசும்போது எல்லாம் தன்னை ஒரு நாயகனாவாகவோ நட்சத்திரமாகவோ கூறுவதில்லை. தான் ஒரு நடிகர் என்று மட்டுமே கூறுவார்.
இதுகுறித்து அண்மைய பேட்டி ஒன்றில் பஹத் பாசில் குறித்து நடிகை ஊர்வசி பேசியபோது, “தன்னை ஒரு நடிகர் என சொல்லிக் கொள்ளும் தைரியம் நிச்சயமாக பஹத் பாசிலுக்கு மட்டும்தான் உண்டு. ஏனென்றால் மற்ற நடிகர்கள் தங்களை நாயகன்களாகவும் முன்னணி நட்சத்திரங்கள் ஆகவும் மாற்றிக் கொள்வதற்காகப் போராடுவார்கள். அதற்கான பாதையில்தான் செல்கிறார்கள். ஆனால், பஹத் பாசிலைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட ஒரு நடைமுறையை உடைத்து, மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை மட்டும் செய்வார். அதனால்தான் அவரை நிச்சயமாக தனித்துவமான நடிகர் என தாராளமாகச் சொல்ல முடியும்,” என்று புகழ்ந்துள்ளார்.