ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம், நவம்பர் 29ஆம் தேதி திரைகாண உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் பேசிய அவர், யாரையும் குறிவைத்து அடிக்காதீர்கள் என விடுத்த வேண்டுகோள் கோடம்பாக்க வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
“இந்தப் படத்தை இப்போதுவரை நான் முழுமையாகப் பார்க்கவில்லை. ஏனெனில் இக்குழுவின் மீது எனக்கு முழுமையாக நம்பிக்கை இருக்கிறது. என்னை அவர்கள் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியுள்ளனர் என்றார்,” ஆர்.ஜே.பாலாஜி.
ஒரு படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் அதற்கு தாமாகவே உரிய வரவேற்பைக் கொடுப்பார்கள் என்றார் அவர்.
“ஒரு பிஸ்கட் பாக்கெட்டை உற்பத்தி செய்வதாக வைத்துக்கொள்வோம். அது விற்பனைக்காக கடைக்கு வந்ததும் அந்த பிஸ்கட்டை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்து, நன்றாக இருக்கிறது அல்லது மோசமாக உள்ளது எனக் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது.
“அதே போன்றுதான் திரைப்படங்கள் குறித்தும் மக்கள் கருத்து சொல்கிறார்கள். இந்தப் படத்தை டிரீம் வாரியர் நிறுவனம் வெளியிடுகிறது. உண்மையில் எனக்காக அவர்கள் இந்தப் படத்தை வெளியிடவில்லை. தரமான படம் என்பதால்தான் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது.
“தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மீதுள்ள கோபத்தை எல்லாம் ரசிகர்கள் இப்போது இணையம்வழி என் மீது கொட்டுகிறார்கள் (பாலாஜி நகைச்சுவையாக இவ்வாறு குறிப்பிட்டபோது அரங்கில் பலத்த சிரிப்பலை எழுந்தது).
“அரசியல் கட்சிகளின் தொழில்நுட்பப் பிரிவுகள் இனி வாரந்தோறும் வெளியாகும் படங்களைக் குறிவைத்து அடிப்பதை விட்டுவிட்டு அரசியல் பணிகளைச் செய்ய வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என அனைத்து நடிகர்களின் படங்களையும் ரசிகர்கள் பார்க்க வேண்டும். பிடிக்காத அம்சங்கள் இருப்பின் அது குறித்து தெரியப்படுத்துங்கள். ஆனால் யாரையும் குறிவைத்து அடித்து உங்களுடைய சக்தியை வீணடிக்காதீர்கள். இதுவே எனது வேண்டுகோள்,” என்று விழாவில் பேசினார் ஆர்.ஜே.பாலாஜி.