‘பேங் பேங்’: ஸோம்பி கதையில் பிரபுதேவா, வடிவேலு

‘பேங் பேங்’: ஸோம்பி கதையில் பிரபுதேவா, வடிவேலு

2 mins read
3e117366-0327-490b-908d-c880dc2002ea
‘பேங் பேங்’ படத்தில் வடிவேலு, பிரபுதேவா. - படம்: சினிமா விகடன்
Google News Preferred Icon

கடந்த 1990களில் தமிழ் சினிமாவின் பல்வேறு படங்களில் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த ஆச்சரியக் கூட்டணி மீண்டும் திரையில் தோன்றி பழையபடி ரசிகர்களைச் சிரிக்க வைக்க உள்ளது.

நடனப்புயல் பிரபுதேவாவும் வைகைப்புயல் வடிவேலுவும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘பேங் பேங்’. ‘காதலன்’, ‘மனதை திருடிவிட்டாய்’, ‘போக்கிரி’, ‘வில்லு’ எனப் பல வெற்றிப் படங்களை அளித்த இந்த அசத்தல் ஜோடியை மீண்டும் இணைய வைத்திருக்கிறார் இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்.

“முதலில் ஹாலிவுட் நாயகன் கிளின்ட் ஈஸ்ட்வுட் பாணியிலான கௌபாய் கதையாகத்தான் யோசித்தோம். ஆனால், செலவுகள் காரணமாகக் கதையில் சில மாற்றங்களைச் செய்து, இந்தோனீசியப் பின்னணியில் ஸோம்பி கதையை வைத்து உருவாக்கியிருக்கிறோம். இதில் அடிதடி, நகைச்சுவை, உணர்வுபூர்வ அம்சங்கள் என அனைத்தும் கலந்திருக்கும்.

“இந்தக் கதையைப் பிரபுதேவாவிடம் சொன்னதும், ‘நீங்கள் வடிவேலுவிடம் சொல்லிவிடுங்கள். நான் அடுத்து கேட்கிறேன் என்றார். அப்போது, வடிவேலு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நட்புக்காகச் சம்பளமே வாங்காமல் ஒரு பாடலுக்குப் பிரபுதேவா நடனம் அமைத்துக் கொடுத்தார்.

“அந்த நேரம்தான் நான் வடிவேலுவைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னேன். அவர் உற்சாகமாகி, பிரபுதேவாவிடம் கதை பிடித்திருந்ததாகக் கூறினார். உடனே, பிரபுதேவாவும், “நாங்கள் மறுபடியும் சேர்ந்து சிறப்பாகச் செய்வோம்,” என்று சொன்னார். படம் அடுத்தகட்டத்துக்குப் போனது அப்படித்தான்,” என்றார் இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்.

துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்துள்ள இத்திரைப்படம், இரண்டு நாள்களில் நடக்கும் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டது. கௌபாய் படங்களில் துப்பாக்கி வெடிக்கும்போது வரும் ‘பேங் பேங்’ என்ற சத்தத்தையே படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளனர்.

இப்படத்தில் பிரபுதேவா, வடிவேலுவுடன் முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்துள்ளனர். ‘டிஎஸ்பி’ புகழ் அனுகீர்த்தி, ‘கொம்புசீவி’ புகழ் தார்னிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக பப்லு பிருத்விராஜ், வடிவேலுவின் மனைவியாகப் புதுமுகம் சினேகா நடித்துள்ளனர்.

இந்தோனீசியாவில் உள்ள ஜாவா தீவுகளில், கொதிக்கும் எரிமலைக் குழம்புகளுக்கு இடையே கடும் குளிரில் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக ஒரு ஸோம்பி கதைக்கு இசையமைத்துள்ளார். ‘மனதை திருடிவிட்டாய்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இக்கூட்டணியுடன் அவர் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

மூன்று பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் இறுதிக்காட்சியில் பெரிய ஆச்சரியம் காத்திருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். நகைச்சுவை மட்டுமன்றி வடிவேலுவின் நடிப்பும், புதுமையான காட்சி அமைப்புகளும் திரையரங்கில் ரசிகர்களுக்குச் சிறந்த அனுபவத்தைத் தரும் என்றும் அவரது குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்