மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருந்து தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளார் பேசில் ஜோசப்.
அவர் இயக்கத்தில் உருவான ‘மின்னல் முரளி’ படம், நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பேசில் ஜோசப் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.
அவர் நடித்த ‘ஜெய ஜெய ஜெய ஹே’, ‘ஃபேலிமி’ உள்ளிட்டவை வெற்றிப் படங்களாக மாறின. அதனால் பேசில் ஜோசப்புக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அண்மையில் வெளியான ‘பராசக்தி’ படத்திலும் பேசில் ஜோசப் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அதுவும் பெரிதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் தமிழில் முதன்மை கதாபாத்திரத்தில் பேசில் ஜோசப் அறிமுகமாகிறார். அந்தப் படத்திற்கு ‘ராவடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘சிறை’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த எல்.கே.அக்ஷய் குமார் ‘ராவடி’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இப்படத்தை இயக்குகிறார்.
சென்னையில் சில நாள்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது.
கலகலப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் ‘ராவடி’யின் சிறு முன்னோட்டத்தைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
படத்தில் சத்யன், ஜான் விஜய், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இப்படம் கோடை விடுமுறையில் திரைகாண உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

