‘எமகாதகி’ படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் நாயகி ரூபா கொடுவாயூர் குறித்த தகவல்களோ படத்தைவிட இன்னும் சுவாரசியமாக உள்ளன.
ரூபா முறைப்படி பரதம் கற்றவர். மற்றவகை நடனங்களிலும் ஆர்வம் அதிகமாம். அது மட்டுமல்ல, இவர் எம்பிபிஎஸ் முடித்த மருத்துவரும்கூட.
“என் தாயாருக்கு எப்படியாவது தன் மகள் மருத்துவராகிவிட வேண்டும் என்று ஆசை. அதை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். பிறகு மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்று படிப்பில் சேர்ந்தேன்,” என்று சொல்லும் ரூபாவுக்கு பூர்வீகம் ஆந்திரா.
இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றுகிறார். தாயார் கல்லூரிப் பேராசிரியை. மருத்துவம் படித்திருந்தாலும் சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக இந்தத் துறைக்கு வந்துவிட்டாராம்.
“சிறு வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் அதிகம். ‘நாட்டிய மயூரி’ உள்ளிட்ட பல நடன விருதுகளைப் பெற்றுள்ளேன். ஐந்து வயதிலிருந்தே குச்சுப்புடி, கதகளி, பரதம் என அனைத்து வகையான நடனங்களையும் கற்றுத்தேற அம்மாவின் ஊக்கம்தான் முக்கியக் காரணம்.
“சிறு வயதில் நடிகைகள் வைஜெயந்தி மாலா, பத்மினி, பானுப்பிரியா ஆகியோரின் நடனங்களைப் பார்ப்பேன். யூடியூப்பில் உள்ள இவர்களுடைய நடனங்களை ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். அவை எனது திறமையை வளர்த்துக்கொள்ள உதவின,” என்கிறார் ரூபா.
‘பாகுபலி 2’ படத்தில் இடம்பெற்ற ‘சாஹோரே பாகுபலி’ பாடலுக்கு பரதநாட்டியம் அமைத்து இவர் வெளியிட்ட காணொளி பலத்த வரவேற்பைப் பெற்றது. பலரால் பாராட்டப்பட்ட இந்த நடனம்தான் பிறகு சினிமா வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
‘உமா மகேஷ்வர உக்ர ரூபஸ்ய’ என்ற படம்தான் தெலுங்கில் இவருக்கு முதல் படம்.
கொரோனா நெருக்கடி வேளையில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைக்க, ஒரே படத்தில் பெயர் வாங்கிய நடிகையாகிவிட்டார் ரூபா. பின்னர் சிறந்த அறிமுக நடிகைக்கான ‘சைமா’ விருதும் கிடைத்தது.
“என்னைப் பொறுத்தவரை இதைப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன். காரணம், நான் கிராமத்தில் இருந்து வந்த பெண். இந்த விருதுக்குப் பிறகு பெற்றோருக்கும் என் மீது மிகுந்த நம்பிக்கை வந்தது.
பிறகு தெலுங்கில் ‘மிஸ்டர். பிரெக்னெண்ட்’ என்ற படத்தில் நடித்தேன். மூன்றாவது வாய்ப்புதான் ‘எமகாதகி’ படம்,” என்கிறார் ரூபா.
அடுத்து தெலுங்கில் ‘சாரங்கபாணி ஜாதகம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளாராம். மேலும் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இவர் நடித்த நீளிரா படம் விரைவில் திரைகாண உள்ளது.
“ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பு நெகிழ வைத்துள்ளது. ‘எமகாதகி’ படத்துக்காக கடுமையாக உழைத்தேன். அதற்கான அங்கீகாரமாகவே மக்களின் பாராட்டு கிடைத்துள்ளது.
“பத்திரிகை, சமூக ஊடகங்களில் கிடைத்துள்ள பாராட்டுகளும் மகிழ்ச்சி தந்துள்ளது எனில், ‘ரூபாவின் நடிப்பு நன்றாக உள்ளது’ என்று ரசிகர்கள் கூறுவது மிகுந்த மனநிறைவைத் தருகிறது,” என்கிறார் ரூபா.