திரைக் கலைஞர்கள் குறித்த ரகசியங்களைத் தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது.
மற்ற நடிகைகள் போல் அல்ல தமன்னா. அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்திப்பார், அதிகமாகவும் பேசுவார். ஆனால், அனைத்தும் பொதுவான விஷயங்களாகவே இருக்கும்.
அண்மைய பேட்டியில் தனது தனிப்பட்ட விருப்பங்கள், அன்றாட நிகழ்ச்சி நிரல் குறித்தெல்லாம் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
“இதுவரை பல படங்களில் நடித்து அனுபவ நடிகையாகிவிட்டேன். ஆனால், இத்தனை ஆண்டுகளில் என்னை அதிகம் வெட்கப்பட வைத்த ஒரு நடிகர் என்றால் அது ரஜினிதான்.
‘காவாலா’ பாடலைப் படமாக்கியபோது நடந்தது குறித்து அவர் ‘ஜெயிலர்’ பட விழா மேடையில் குறிப்பிட்டபோது மிகவும் வெட்கமாகிவிட்டது. இருப்பினும் அவரது பேச்சை வெகுவாக ரசித்தேன்,” என்று சொல்லும் தமன்னாவுக்கு தமிழில் பிடித்த நாயகன் என்றால் அது கார்த்திதானாம்.
அவரைப் போன்ற சிறந்த சக நடிகர் கிடைப்பது அரிது என்கிறார். மேலும், படப்பிடிப்பின்போது கார்த்தி இருந்தால் மொத்த படக்குழுவும் உற்சாகமாக காணப்படும் எனப் பாராட்டுகிறார்.
“என் வாழ்வில் இனிய தருணங்கள் என்றால் என் நண்பர் விஜய் வர்மாவுடன் செலவிட்ட நேரத்தைத்தான் சொல்வேன். இதுகுறித்து பலமுறை வெளிப்படையாக கூறியிருக்கிறேன். ஆனால், இப்போது அவர் இருந்த இடம் காலியாகத்தான் உள்ளது,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ள தமன்னா, மனம் குழம்பியுள்ள நேரங்களில் அருகில் உள்ள கோவிலுக்குச் செல்வதுதான் வழக்கம். திருப்பதி கோவிலுக்குச் சென்று திரும்பியபோது மனநிறைவாகவும் நிம்மதியாகவும் இருந்ததாகச் சொல்கிறார்.
தமன்னாவுக்கு நெருக்கமானவர்கள், அவரைப் ‘பொறுமைத்திலகம்’ என்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“உண்மைதான். அவசரப்பட்டு பெரிதாக எதைச் சாதிக்கப் போகிறோம். விமான நிலையத்தில் நாம் எவ்வளவு சீக்கிரமாகச் சென்றாலும் விமானம் அது புறப்பட வேண்டிய நேரத்தில்தான் கிளம்பும். அதனால்தான் எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும் அவர்களுடன் நின்று ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்வேன்.
“அதே சமயம், எனக்குப் பிடிக்காத விஷயங்களை ஒருவர் செய்தால் அவரை விட்டுப் பேசாமல் விலகிவிடுவேன். குறிப்பாக, நம் வீட்டு வாசலில் காலணிகளை கழற்றிவிடும்போது உரிய இடத்தில் வைக்காமல் போனால் கோபம் வரும்,” என்று தமன்னா கூறியுள்ளார்.
அவருக்குத் தெரிந்த ஒரே அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலின்தானாம்.
நிறைய பயணம் செய்வது இவருக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக காஷ்மீர், பாரிஸ், துபாய் ஆகிய இடங்கள்தான் இவருக்குப் பிடித்தமானவை.
எப்போது பாரிஸ் சென்றாலும் அப்படியே லண்டனுக்கும் செல்ல மறப்பதில்லை. இரண்டு நகரங்களிலும் பகல் முழுவதும் இஷ்டம்போல் சுற்றித்திரிவாராம்.
தமன்னாவின் மனம்கவர்ந்த ஹாலிவுட் படம் ‘டைட்டானிக்’. பிடித்த ஹாலிவுட் நாயகன் ரிச்சர்ட் கேர்.
பெரிய தொழிலதிபர் ஆவதுதான் இவரது லட்சியமாக இருந்துள்ளது. நடிகையானதால் இதுவரை அந்த விருப்பம் கைகூடவில்லை என்றாலும் முதல் அடியாக சிறிய அளவில் நகைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமன்னாவின் தந்தை ஒரு வைர வியாபாரி என்பதால் சிறு வயதிலேயே நகைத்தொழில் தொடர்பான நுணுக்கங்கள் இவருக்கு அத்துப்படியாம்.
சரி, தமன்னா ஆண்களுக்குக் கூறும் அறிவுரை என்ன?
“ஓர் அறிவுரையை முக்கியமாகச் சொல்ல விரும்புகிறேன். நான் இப்படித்தான் என்று கூறும் பெண்களிடம் கவனமாக இருக்கப் பாருங்கள். உண்மையாகவே எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்கள் ஒரு நாளும் வெளிப்படுத்த மாட்டார்கள்.”