‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ சாதனை: ஃபஹத் பாசில் நெகிழ்ச்சி

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ சாதனை: ஃபஹத் பாசில் நெகிழ்ச்சி

படம்: இந்து தமிழ் திசை

19 Sep 2026 - 5:09 pm

2 mins read

நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ மலையாளத் திரைப்படம் ரூ.300 கோடி வசூலித்துப் புதிய சாதனை படைத்துள்ளது.

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தைப் பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடிக்க, விஷ்ணு விஜய் இசையமைப்பில் அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இத்திரைப்படம், கேரளாவில் 28வது நாளாக 266 திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

வெளியாகி 24 நாள்களில் ரூ.300 கோடி வசூலை எட்டிய மலையாளத் திரைப்படம் எனும் புதிய மைல்கல்லை இப்படம் தன்வசமாக்கியுள்ளது.

முன்னதாக புகழ்பெற்ற ‘லோகா சாப்டர் 1-சந்திரா’ திரைப்படம் இந்தத் தொகையை எட்ட 45 நாள்கள் எடுத்துக்கொண்ட நிலையில், இத்திரைப்படம் 24 நாள்களிலேயே எட்டியுள்ளது.

படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்துப் பேசிய ஃபஹத் பாசில், “புதுமையான கதையம்சம் உள்ள படங்கள் எப்போதும் வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

“அற்புதமான திரைக்கதை, வயது வித்தியாசம் கொண்ட காதல், காட்சிகள் அமைக்கப்பட்ட விதம், நகைச்சுவை, ஓணம் பண்டிகை விடுமுறைக் காலம் ஆகியவையும் வெற்றிக்கான காரணங்கள்,” என்று குறிப்பிட்டார்.

ஒரு தயாரிப்பாளராகச் சரியான திரைக்கதையையும் விளம்பரத்தையும் கொண்டு சேர்ப்பதே தனது பணி என்றும் புதிய திறமைகளைத் தேடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டோன்ட் டிரபுள் தி டிரபுள்’ எனும் தனது தெலுங்குத் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு ஃபஹத் பாசில் ஆயத்தமாகி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்இசைகேரளாதிரையரங்கு