தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது: சிவகார்த்திகேயன் அறிவுரை

2 mins read
d11c44e0-a1cf-443f-be36-0fd237e96ce2
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக ஊடகங்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கோவா அனைத்துலகத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர், சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டைக் குறைப்பது குறித்தும் தன் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

கோவா சென்ற சிவகார்த்திகேயனை நடிகை குஷ்பு பேட்டி கண்டுள்ளார்.

இந்த பேட்டியில்தான் சமூக வலைத்தளங்கள், மன அழுத்தம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தயக்கமின்றி பதில் அளித்தாராம் சிவா.

“என்னைப் போல் மற்றவர்களும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பது நல்லது. ஒருவேளை எலான் மஸ்க், என் டிவிட்டர் பக்கத்தை முடக்கினால் அதுவே எனக்குக் கிடைத்த முதல் வெற்றியாக இருக்கும் என நினைக்கிறேன்,” என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குஷ்புவுடனான அந்த உரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சோகத்தில் இருந்து வெளிவர மேடைகளைப் பயன்படுத்தினேன். கைத்தட்டல்கள்தான் எனக்கான நல்ல சிகிச்சை முறையாக அமைந்தன. நான் படித்த கல்லூரியில்தான் எனக்கான முதல் மேடை அமைந்தது. என் நண்பர்கள்தான் மேடையில் ஏற ஊக்கம் அளித்தனர்,” என்று சிவா மேலும் கூறியுள்ளார்.

இவர் நடித்த ‘அமரன்’ படத்தின் வசூல் 300 கோடி ரூபாயைக் கடந்துவிட்டது. இந்நிலையில், மேஜர் முகுந்த் வரதராஜனின் மூத்த சகோதரி நித்யா, அந்தப் படம் ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையைத் துல்லியமாகப் படமாக்கி உள்ளதாகப் பாராட்டியுள்ளார். தனது சகோதரர் முகுந்த் ராணுவ வீரராக வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

“பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது நல்ல மதிப்பெண்களைப் பெற்றால் வேறு துறையில் படிக்க அனுப்பிவிடுவார்கள் என்று பயந்து, எப்போதும் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெறாமல் கவனமாக இருந்தார் முகுந்த்,” என்றும் நித்யா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்