மீண்டும் திரைப்படம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார் பாக்யராஜ்.
திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தமக்கு, மீண்டும் திரைப்படம், இணையத்தொடர்களை இயக்கும் எண்ணம் மனத்தில் வலுவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“திரையுலகுக்கு வர நண்பர்கள் உதவினர். ‘16 வயதினிலே’ படத்தின் வெற்றி பலரது வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதில் நானும் ஒருவன்.
“உதவி இயக்குநர், கதை, திரைக்கதை ஆசிரியர், கதாநாயகன், இயக்குநர் எனப் படிப்படியாக பன்முகத்தன்மையுடன் வளர்ந்தேன்,” என்று கூறியுள்ளார் பாக்யராஜ்.
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தற்செயலாகச் சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்க நேர்ந்தது. அதைப் பார்த்த இவரது தாயார், ‘நீயும்கூட கதாநாயகனாகலாமே’ என்றாராம்.
‘அதற்குத் தனித்திறமை வேண்டும்’ என்று பாக்யராஜ் கூற, ‘கண்டிப்பாக நீ கதாநாயகனாவாய். உன் இயக்குநர் நிச்சயம் உன்னை நடிக்க வைப்பார்’ என்றும் கூறினாராம்.
“என் தாயார் கூறியதைப்போல் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநரான என்னைக் கதாநாயகனாக நடிக்கவைத்து அழகு பார்த்தார் எனது குருநாதர் பாரதிராஜா,” என்று அண்மைய பேட்டியில் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் பாக்யராஜ்.

