நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் நடிகை பாவனா நடித்துள்ள படம், ‘அனோமி’.
பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வரும் அப்படத்தில் ரகுமானுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், பாவனா அளித்த நேர்காணல் ஒன்றில் மம்முட்டி, பிருத்விராஜ் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
“மலையாளத் திரையுலகிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனத் தோன்றியது. அதனால், சில ஆண்டுகளாக அம்மொழி படங்களில் நடிக்கவில்லை. அது திடீரென எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், அது என்னைப் பாதிக்கவில்லை. நான் நிம்மதியாக உணர்ந்தேன்,” என பாவனா கூறினார்.
“அப்போதும், மலையாளத் திரையுலக நண்பர்கள் சிலர் தொடர்ந்து என்னை நடிக்க அழைத்தனர். ஆஷிக் அபு, பிருத்விராஜ், ஜெயசூர்யா, மம்முட்டி ஆகிய உச்ச நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் மறுத்து விட்டேன்,” என அவர் தெரிவித்தார்.
மறுத்ததற்கான காரணம் தனக்கே தெரியவில்லை எனக் கூறிய பாவனா, தான் தொடர்ந்து கன்னடப் படங்களில் நடித்ததாகவும் தனக்கு வசதியான வட்டத்துக்குள் இருந்ததில் நிம்மதியாக உணர்ந்ததாகவும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

