விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபிள்யூ கார், இயக்குநருக்கு தங்கம்; தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாரி வழங்கிய பரிசுகள்

விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபிள்யூ கார், இயக்குநருக்கு தங்கம்; தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாரி வழங்கிய பரிசுகள்

2 mins read
730bac85-bb41-493e-a7a2-bf1ab63ef790
படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர பிஎம்டபிள்யூ சொகுசு காரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்க நகையும் பரிசாக வழங்கப்பட்டன. - படம்: சமூக ஊடகம்

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2’.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து உருவான இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து, வெளியான வெறும் 5 நாட்களிலேயே ரூ.25 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் இந்த அசுர வேக வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினரை உத்வேகப்படுத்தும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விலையுயர்ந்த பரிசுகளை வாரி வழங்கியுள்ளார்.

அதன்படி, படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர பிஎம்டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்க நகையும் படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் அனைவருக்கும் தலா 40 கிராம் வெள்ளி நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டன.

தயாரிப்பாளரின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் படக்குழுவினர் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

அண்மைகாலமாக தமிழ்த் திரையுலகில் வெற்றிப் படங்களின் இயக்குநர்களுக்குக் கார்கள் பரிசளிக்கப்படுவது ஒரு ஆரோக்கியமான மாற்றமாக உருவெடுத்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் 100வது நாள் வெற்றியை முன்னிட்டு, அதன் இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு நடிகர்-தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் விலை உயர்ந்த மின்சார கார் ஒன்றைப் பரிசாக வழங்கியிருந்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதனைத் தொடர்ந்து தற்போது ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவிற்கும் கார், தங்கம், வெள்ளிப் பரிசுகள் குவிந்து வருவது கோலிவுட் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்