மறைந்த நடிகை ஸ்ரீதேவி-தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான நடிகை ஜான்வி கபூர், பல படங்களிலும் ஒப்பந்தமாகி பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகி உள்ளார்.
தமிழக ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில், “எந்தவொரு உறவையும் கவனத்துடன், முறையாக ஒரு எல்லை வகுத்துப் பழகுங்கள். குறிப்பாக, இளம்பெண்களே ஆண்களிடம் எல்லை மீறி பழகி ஏமாந்துவிடாதீர்கள், ஏமாற்றுபவர்களாக இருந்தால் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிடுங்கள்,” என்று அறிவுறுத்தியுள்ளார் ஜான்வி.
தானும் இதுபோன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளதாகக் கூறியுள்ள அவர், “நடந்ததை நினைத்து மனம் உடைந்து அழுதுள்ளேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக என்னை ஏமாற்றியவரே மீண்டும் என்னிடம் வந்து உடைந்த என் மனத்தைச் சரிசெய்துவிட்டார்,” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
“இன்றைய இளந்தலைமுறையினர் எவ்வித பொறுப்புணர்வும் இன்றி ஒரு பொழுதுபோக்குபோல் குறுகிய காலத்திற்கு மட்டுமே காதல் செய்கின்றனர். இது மிகவும் மோசமான, இந்தியக் கலாசாரத்துக்கு ஒத்துவராத உறவுமுறை என்று கருதுகிறேன்.
“ஒருவருடன் பழகும்போது நேர்மையாக, அர்ப்பணிப்புடன் பழகவேண்டும். அதை விட்டுவிட்டு, குறுகிய காலத்துக்கு மட்டும் ஒருவருடன் பழகி, அவருடன் நெருக்கமாக இருந்தபின்னர் பிடிக்கவில்லை என்று ஓடிவிடுவது சரியான அணுகுமுறை அல்ல. இது உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்,” என்கிறார் ஜான்வி.
வரலாற்றில் எந்தக் காலகட்டத்திற்குச் செல்ல விருப்பப் படுகிறீர்கள்? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “மகாத்மா காந்திக்கும் சட்டமேதை அம்பேத்கருக்கும் இடையில் இருந்த சாதி குறித்த பார்வைகளையும் கருத்துகளையும் விவாதங்களையும் காண ஆசைப்படுகிறேன். இருவரும் இந்திய சமூகத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்தவர்கள்.
“வரலாற்றை அறிந்துகொள்வதில் எனக்கு அலாதி ஆர்வமுள்ளது,” என்கிறார் ஜான்வி கபூர்.