வில்லனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பசுபதி. பின்னர் நாயகனாக உயர்ந்து, தற்போது குணசித்திர வேடங்களில் மிளிர்ந்து வருகிறார்.
‘சார்பட்டா’ படம் முதல் ‘பைசன்’ வரை பல படங்களில் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. கூத்துப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட பசுபதி சிறு கதாபாத்திரங்களில்கூட நடிக்கத் தயங்குவதில்லை.
எந்தப் படமாக இருந்தாலும் தனது கதாபாத்திரம் எப்படிப்பட்டது, கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஒத்துப்போகிறதா என்றுதான் பார்க்கிறார் பசுபதி.
“அதன் பிறகு ஒரு கதையில் இயல்பாகவே உள்ள வலுவான அம்சங்கள், கதாபாத்திரத்தைச் சரியாக வெளிப்படுத்துவதற்கான என்னுடைய மெனக்கெடல் ஆகியவை சேரும்போது அது பேசப்படுகிறது.
“மற்றபடி எண்ணிக்கைக்காக, படத்துக்காக நடிக்க மாட்டேன். மக்களுக்கு நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்று சொல்லும் பசுபதியைப் பொதுவெளியில் அதிகம் பார்க்க முடியாது.
சென்னைப் புறநகரில் வசிப்பவர், விவசாயம், புத்தகம் வாசிப்பு, உடற்பயிற்சி என மகிழ்ச்சியாகவும் பயனுள்ள வகையிலும் பொழுதைக் கழிக்கிறாராம்.
“ஒரு ஆண்டு முழுவதும்கூட பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது உண்டு. தற்போதைய இளைய தலைமுறைக்கு உயர்கல்வி படிப்பு இருந்தாலும் தங்களுக்குப் பிடித்தமான விஷயத்தைச் செய்கிறார்கள். நான் அதை 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டேன். மனத்தை
ஒருமுகப்படுத்த பயிற்சி எடுக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“அதற்கு புத்தகங்கள் உதவுகின்றன. மன அழுத்தம், மகிழ்ச்சி என எந்தச் சூழலிலும் புத்தகங்கள் துணை நிற்கின்றன.
“அரசியல், வரலாறு எனப் பல புத்தகங்களைப் படிக்கிறேன். படிக்கும்போது என்னைச் சமநிலையில் வைத்துக்கொள்ள முடிகிறது.
அழுதாலும் சிரித்தாலும் புத்தகங்கள் என் மனநிலையை மாற்றுகின்றன,” என்கிறார் பசுபதி.
கற்றல் மீது தனக்கு எப்போதுமே விருப்பம் உண்டு என்று அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள அவர், இசை, மலையேற்றம், ஆழ்கடல் நீச்சல் எனப் பலவற்றைக் கற்றுகொள்ள விரும்புகிறாராம்.
நாள்தோறும் காலை 5 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சியுடன் இவரது அன்றாட வாழ்க்கை தொடங்குகிறது.

