மதுப் பழக்கத்தால் ஏற்படும் சீரழிவை விவரிக்கும் நல்ல படைப்பு - ‘பாட்டில் ராதா’

2 mins read
393b506f-11f5-467d-af61-d7715d6c7761
 ‘பாட்டில் ராதா’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

பா.ரஞ்சித் குழுவில் பணியாற்றிய உதவி இயக்குநர்களில் ஒருவரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் படம் ‘பாட்டில் ராதா’.

மதுப் பழக்கத்தால் ஏற்படக் கூடிய தீமைகளை அலசும் கதையை தனது முதல் படத்திலேயே கையாண்டுள்ளார் தினகரன் சிவலிங்கம் என்பது அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பின் மூலம் உணர முடிகிறது என்று கோடம்பாக்கத்தினர் பாராட்டுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலுக்குத்தான் எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும். அங்கு உருவாகும் அழகான பட்டுப்புடவைகள் உலகப் புகழ் பெற்றவை. ஆனால், அங்குள்ள பல குடும்பங்களில் குடிப்பழக்கம் காரணமாக எப்போதும் சண்டை சச்சரவுகள், கடன் என ஏதாவது ஒரு விவகாரம் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பல்வேறு சம்பவங்களைப் பார்த்து வளர்ந்தவராம் தினகரன் சிவலிங்கம்.

“எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் மதுப்பழக்கம் என்பது அருந்துபவனையும் அவனது குடும்பத்தையும் மொத்தமாக அழித்துவிடும். அப்படி ஒரு தொழிலாளி மிகுந்த திறமைசாலியாக இருந்தும்கூட மதுப்பழக்கத்தால் அவனது குடும்பம் என்ன ஆகிறது என்பதை அலசும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.

“எனது தந்தையும் திறமைசாலிதான். ஆனால், மதுப்பழக்கத்தால் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டார். மதுபோதையில் பல இடங்களில் விழுந்துகிடக்கும் அவரை நான்தான் அங்கு சென்று அழைத்து வருவேன். இப்போது இறந்துவிட்டார்.

“என் தந்தையிடம் அந்த ஒரு பழக்கம் மட்டும் இல்லை என்றால் அவர் என்னவாக இருந்திருப்பார் என்று எனக்கு நன்றாகத் தெரியும்,” என்று சொல்லும் தினகரன் சிவலிங்கம், தனது நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான சம்பவங்களையும் தன் படத்தில் சேர்த்துள்ளாராம்.

தமிழகத்தில் பல குடும்பங்கள் நலிவடைந்து போக மதுதான் முக்கியக் காரணம் என்கிறார்.

“என்னதான் ஒரு கதை சிறப்பாக எழுதப்பட்டாலும் அதைப் படமாக்கும்போது திறமைவாய்ந்த நடிகர்கள் அவசியம்,” என்று குறிப்பிடும் தினகரன், ‘பாட்டில் ராதா’ கதையை தாம் இயக்க நடிகர் குரு சோமசுந்தரம்தான் முக்கியமான காரணம் என்கிறார்.

பாட்டில் ராதாமணி என்ற கதாபாத்திரத்தில் அவரைவிட வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை என்றும் பாராட்டுகிறார்.

’பாட்டில் ராதா’ படத்தில் ஜான் விஜய், அன்பரசி, ஆறுமுகவேல், பரி இளவழகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனைவருமே மனநிறைவு தரும் வகையில் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து பங்களித்துள்ளனர். ஷான் ரோல்டன்தான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே வெளியான இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

“இந்தப் படத்தால் நான் சார்ந்துள்ள சமூகத்துக்கு ஏதேனும் சிறிய அளவில் நல்லது நடந்தாலும் மகிழ்ச்சிதான். மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்த வேண்டும். குடிகாரர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று இந்தப் படம் பாடம் எடுக்காது. அதேசமயம் நல்ல அம்சங்களுடன் கூடிய படைப்பாக இருக்கும். நல்ல படம் எனும் பெயர் கிடைத்தால் அதுவே எனக்குப் போதும்,” என்கிறார் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.

குறிப்புச் சொற்கள்